வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விழுப்புரத்தில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் 90 பேர் கைது


வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விழுப்புரத்தில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் 90 பேர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2020 8:46 AM IST (Updated: 16 Dec 2020 8:46 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விழுப்புரத்தில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை கண்டித்தும், இந்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் டெல்லியில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை ஆதரித்தும் தமிழகம் முழுவதும் விவசாயிகள், அரசியல் கட்சியினர் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்திலும் விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று முன்தினம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

2-வது நாளாக போராட்டம்

இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார், மோகன்ராஜ், விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் சகாபுதீன், மாவட்ட விவசாய சங்கத்தின் தலைவர் சிவராமன், மாநிலக்குழு உறுப்பினர் தாண்டவராயன், அகில இந்திய விவசாயிகள் மகாசபை பொறுப்பாளர் செண்பகவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இவர்களிடம் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையிலான போலீசார் சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து ஈடுபட்டனர்.

90 பேர் கைது

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட90 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story