இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - உறவினர்கள் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி,
இலங்கை கடற்படையினர் கல்பிட்டி அருகே ரோந்து சென்று கொண்டு இருந்தார்களாம். அப்போது, அந்த பகுதியில் மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 5 விசைப்படகுகளை கடற்படையினர் மடக்கி சிறைபிடித்து சென்றனர். அதில் இருந்த 36 மீனவர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் தூத்துக்குடியில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகும் சிக்கியது. அந்த படகில் 7 பேர் இருந்தனர்.
அவர்களில், தருவைகுளத்தை சேர்ந்த வேல்ராஜ் (வயது 39) , தாளமுத்துநகரை சேர்ந்த ஆனந்த் (40) , தனுஷ் (21) , சிலுவைப்பட்டியை சேர்ந்த அன்பு (40) , பாண்டி (23) ஆகிய 5 பேரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் ஆவர். இது தவிர தென்காசி மேலகரத்தை சேர்ந்த தங்கப்பாண்டி (30) , ராமேசுவரத்தை சேர்ந்த உமையஸ்வரன் (38) ஆகியோரும் இருந்தனர்.
இவர்கள் 7 பேரும் இலங்கை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனால் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story