விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியல் உள்ளது; மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து


மதுரை ஐகோர்ட்டு
x
மதுரை ஐகோர்ட்டு
தினத்தந்தி 16 Dec 2020 11:25 PM GMT (Updated: 17 Dec 2020 1:42 AM GMT)

விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியல் உள்ளது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

வீரர்களுக்கு அரசு வேலை

மதுரை புதூர் கண்ணேனந்தல் பகுதியைச் சேர்ந்த பரசுராமன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் 23 வருடங்களாக மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறேன். அதன்மூலம் வெளிநாடுகளில் நடந்த பாரா ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்டு பல வீரர்களை வெற்றிபெற வைத்துள்ளேன். இதில் குருநாதன் என்ற விளையாட்டு வீரர் வெளிநாடுகளில் நடந்த மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பல போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 26 பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் மலேசிய விளையாட்டு் போட்டிகளில் குருநாதன் வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், போட்டிகளில் நமது நாட்டிற்கு சிறப்பு சேர்த்துள்ளார். மலேசியா, லண்டன், துனீசியா, தாய்லாந்து, போன்ற நாடுகளில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். தேசிய, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று உள்ளார்.

இவர் தற்போது தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நிரந்தர அரசு பணி வழங்க வேண்டும். அதேபோல மாற்றுத்திறனாளிகளில் சாதனை படைத்த பல வீரர்கள் அரசுப் பணியின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கும் அரசு நிரந்தர பணி வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பதிவு செய்வது அவசியம்
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, “மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த வேலைகளில் சேர்வதற்கு அவர்கள் முறையாக பதிவு செய்திருப்பது அவசியம்” என்று வாதாடினார்.

அரசியல் உள்ளது
இதையடுத்து நீதிபதிகள், “புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கவில்லை என்றாலும் திறமையான விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகள் பற்றிய விவரங்களையாவது முழுமையாக தெரிவிக்க வேண்டும். ஆனால் அது போல் செய்வதாக தெரியவில்லை. விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியல் உள்ளது. அதிர்ஷ்டவசமாக தற்போது கிரிக்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வாகியுள்ளார்” என்று தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

Next Story