சோழிங்கநல்லூர் பகுதியில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 4 ஆட்டோக்கள் பறிமுதல்


சோழிங்கநல்லூர் பகுதியில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 4 ஆட்டோக்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Dec 2020 7:21 AM IST (Updated: 17 Dec 2020 7:21 AM IST)
t-max-icont-min-icon

சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில் சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் விதிமுறைப்படி இயக்கப்படுகிறதா? என்று அதிகாரிகள் சோழிங்கநல்லூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டது. விளக்குகள் பொருத்தாத வாகனங்களின் தகுதி சான்றுகளை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி பகுதியில் சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன தணிக்கை செய்த போது 4 ஆட்டோக்கள் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த தணிக்கையின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜேந்திரன், முரளி ஆகியோர் இருந்தனர்.

இதேபோல் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.மோகன் தலைமையில் நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் மற்றும் சென்னை வடக்கு சரக பறக்கும்படை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போக்குவரத்து துறை அதிகாரிகள் அங்கிருந்த திரளான ஆட்டோ டிரைவர்களிடம் அனைவரும் அரசின் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்கள். அப்போது சாலை விதிமுறைகளை மீறி ஆட்டோக்களை இயக்கிய 10-க்கும் மேற்பட்ட டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story