தஞ்சை ரெயில்வே குட்ஷெட் பகுதியில் உரம் ஏற்றுவதற்காக வந்த 10 லாரிகளில் பேட்டரி திருட்டு


தஞ்சை ரெயில்வே குட்ஷெட் பகுதியில் உரம் ஏற்றுவதற்காக வந்த 10 லாரிகளில் பேட்டரி திருட்டு
x
தினத்தந்தி 17 Dec 2020 9:30 AM IST (Updated: 17 Dec 2020 9:30 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை ரெயில்வே குட்ஷெட் பகுதியில் உரம் ஏற்றுவதற்காக வந்த 10 லாரிகளில் மழையை பயன்படுத்தி பேட்டரிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயில் நிலையத்தின் பின்பகுதியில் ரெயில்வே குட்ஷெட் லாரி சங்கம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான லாரிகள் நிறுத்தப்பட்டு இருக்கும். தஞ்சையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் அரிசி, கோதுமை, உரம் போன்றவற்றை எடுத்துச்செல்வதற்கும் இந்த லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி இன்று வெளி மாநிலத்தில் இருந்து வரும் உரங்களை ஏற்ற வேண்டும் என்பதற்காக நேற்று முன்தினம் இரவே லாரிகளை கொண்டு வந்து குட்ஷெட் பகுதியில் நிறுத்தி இருந்தனர். வழக்கமாக லாரி டிரைவர்கள், கிளீனர்கள் லாரிகளில் இரவு நேரங்களில் தங்குவது வழக்கம்.

பேட்டரிகள் திருட்டு

ஆனால் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மழை பெய்தது. இதையடுத்து டிரைவர்கள், கிளீனர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். இதை பயன்படுத்தி மர்ம நபர்கள் அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 லாரிகளில் இருந்த பேட்டரிகள் மற்றும் அதனுடன் இணைந்து இருந்த வயர்களையும் வெட்டி எடுத்துச்சென்று விட்டனர். ஒவ்வொரு லாரியிலும் பொருத்தப்பட்டு இருந்த பேட்டரி மற்றும் வயர்களின் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். நேற்று காலை லாரியை எடுப்பதற்காக வந்த லாரி டிரைவர்கள் பேட்டரி திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசில் புகார்

இது குறித்து குட்ஷெட்லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவரும் லாரி நிறுத்தப்பட்டு இருந்த இடத்திற்கு வந்து பார்த்தார். பின்னர் இது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் வந்து பார்வையிட்டனர்.

பின்னர் தஞ்சை தெற்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் திருடிச்சென்ற காட்சி பதிவாகி உள்ளதா? என தேடி வருகிறார்கள்.

இது குறித்து ராஜகுமார் கூறுகையில், ‘‘தஞ்சை மாநகரில் தொடர்ந்து லாரிகளில் பேட்டரி திருட்டு நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான படை நிலையம் அருகே லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் 4 லாரிகளிலும், பள்ளியக்ரகாரம் பகுதியில் 4 லாரிகளிலும் பேட்டரிகளை திருடிச்சென்று உள்ளனர். தற்போது குட்ஷெட் பகுதியில் 10 லாரிகளில் திருடிச்சென்று உள்ளனர். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும்’’என்றார்.

Next Story