நெற்பயிர் பாதிக்கப்பட்ட வயல்களில் தண்ணீர் வடியும் முன்பு தஞ்சையில் மீண்டும் மழை; விவசாயிகள் கவலை
நெற்பயிர் பாதிக்கப்பட்ட வயல்களில் தண்ணீர் வடியும் முன்பு மீண்டும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப்பருவமழை பெய்து வருகிறது. ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் நிவர், புரெவி புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்தது. அதிலும் குறிப்பாக புரெவி புயல் காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை நீடித்தது. இதனால் தஞ்சை மாவட்டம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
இந்த மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்து முளைத்தன. இளம் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகின. இதே போல் நிலக்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டன.
மீண்டும் மழை
மேலும் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விளைந்த நெற்பயிர்களில் தேங்கிய தண்ணீர் இன்னும் வடியாமல் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை இன்றி காணப்பட்டதால் தண்ணீர் வடிந்து வந்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி நேற்று அதிகாலை 2 மணி முதல் மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து காலை 8 மணி வரை இந்த மழை நீடித்தது. அதன்பின்னர் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழைபெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. ஏற்கனவே பல இடங்களில் சாலைகளில் தேங்கிய மழைநீர் வடிவதற்கு முன்பே மீண்டும் மழை பெய்ததால் தண்ணீர் மேலும் தேங்கி குளம் போல காணப்பட்டது.
விவசாயிகள் கவலை
இந்த நிலையில் ஏற்கனவே அறுவடைக்கு தயாரான நெற்பயிர் வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிவதற்கு முன்பே மீண்டும் மழை பெய்ததால் மேலும் தண்ணீர் தேங்கியது. அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் உள்ள வயல்கள் காய்ந்த நிலையில் ஓரிரு நாட்களில் அறுவடை செய்யப்படும் என்ற நிலையில் மீண்டும் மழை காரணமாக தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மழை அளவு
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அதிராம்பட்டினம் 44, பட்டுக்கோட்டை 37, பேராவூரணி 32, வெட்டிக்காடு 28, அய்யம்பேட்டை 26, ஒரத்தநாடு 27, நெய்வாசல் தென்பாதி 26, தஞ்சை 22, வல்லம் 20, மஞ்சளாறு 16, கும்பகோணம் 15, திருவிடைமருதூர் 15, குருங்குளம் 13, பூதலூர் 12, திருவையாறு 11, பாபநாசம் 10, ஈச்சன்விடுதி 7, திருக்காட்டுப்பள்ளி 6, அணைக்கரை 5, கல்லணை 3.
Related Tags :
Next Story