ஈரோட்டில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்


ஈரோட்டில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2020 11:29 AM IST (Updated: 17 Dec 2020 11:29 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. இன்று (வியாழக்கிழமை) பெண் விவசாயிகள் பங்கேற்று போராடுகிறார்கள்.

ஈரோடு, 

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்சார மசோதா 2020-ஐ சட்டமாக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுடெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஈரோட்டில் கடந்த 14-ந் தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. 3-வது நாளாக நேற்றும் இந்த போராட்டம் தொடங்கியது.

போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.முனுசாமி தலைமை தாங்கினார். மூத்த விவசாயி காசியண்ணன் முன்னிலை வகித்தார். நேற்றைய போராட்டத்தை தி.மு.க. மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தன் தொடங்கி வைத்து பேசினார்.

ஊர்வலம்

போராட்டத்தில் அ.கணேசமூர்த்தி எம்.பி., தி.மு.க. மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டு போராட்டக்குழுவினரை உற்சாகப்படுத்தினார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன், தி.மு.க. விவசாய அணி செயலாளர் ஆர்.பி.சண்முகம், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பேசினார்கள். மேலும், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் விஜயராகவன், கைத்தறி நெசவாளர்கள் சங்க மாநில தலைவர் சித்தையன், சென்னிமலை ஒன்றிய கைத்தறி விவசாயிகள் சங்க செயலாளர் ரவி ஆகியோரும் பேசினார்கள். ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் நா.முருகன், பொதுக்குழு உறுப்பினர் மேலை சென்னியப்பன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பி.வி.செல்வராஜ், முக்கிய நிர்வாகிகள் எம்.முகமது சாதிக், அ.சக்திவேல், நா.ஜெயக்குமார், ஜெயசித்ரா ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

புரட்சிகர இளைஞர் முன்னணியினர் மாநகர பொறுப்பாளர் வக்கீல் ஜெயப்பிரகாஷ் தலைமையில் அரசு ஆஸ்பத்திரி பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு அளித்தனர்.

பெண்கள்

ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொறுப்பாளர் சின்னச்சாமி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண.குறிஞ்சி, நிலவன், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கி.வே.பொன்னையன், சி.என்.துளசிமணி, சுப்பு உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் மதிய உணவு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். 4-வது நாள் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் முழுவதும் பெண் விவசாயிகள், பெண்கள் அமைப்பினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேச இருப்பதாக ஒருங்கிணைப்பாளர் கி.வே.பொன்னையன் கூறினார்.

Next Story