ஆற்காடு அருகே நீர்வரத்து கால்வாயை சீரமைக்கக்கோரி சாலை மறியல்
ஆற்காடு அருகே நீர்வரத்து கால்வையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வருகின்றன.
அதேபோல் ஆற்காடு தாலுகா மாங்காடு கிராமத்தில் உள்ள ஏரியும் நிரம்பி வருகிறது. ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் மழைநீர் வீணாகிறது.
மேலும் ஏரியில் மீன் பிடிப்பவர்கள் மதகுகளை மூடி விடுகின்றனர். இதனால் ஏரிக்கு வரும் நீர் வீணாகிறது. எனவே கால்வாயை அகலப்படுத்தக்கோரியும், புதிய மதகுகள் அமைக்க வேண்டும் எனவும் கடந்த வாரம் கோரிக்கை வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாலைமறியல்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மாங்காடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இதுகுறித்து பொதுப்பணித் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த பொதுப்பணித்துறையினர் மழையின் காரணமாக ஏரி கால்வாய் சேறும், சகதியுமாக உள்ளது. இதில் பொக்லைன் எந்திரத்தை இறக்கி தூர்வார இயலாது. எனவே மாற்று ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story