வேலூரில் சிறைத்துறை டி.ஐ.ஜி. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
வேலூரில் சிறைத்துறை டி.ஐ.ஜி. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை செய்தனர்.
திடீர் சோதனை
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். மேலும் சென்னை தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முருகன் அலுவலகத்திலும் சோதனை செய்யப்பட்டது.
முருகனின் மனைவி ஜெயபாரதி. இவர் வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக உள்ளார். இவர் பெண்கள் தனிச்சிறை அருகே உள்ள சிறைத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி பள்ளி வளாகத்தில் (ஆப்கா) உள்ள வீட்டில் வசித்து வருகிறார். எனவே முருகன் தொடர்பான ஆவணங்களோ அல்லது பணம் ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் கருதினர்.
அதன்படி நேற்று காலை 11 மணி அளவில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமாவதி தலைமையில் போலீசார் திடீரென அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்ய தொடங்கினர்.
அனுமதி மறுப்பு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் அங்கு சென்றனர். ஆனால் ‘ஆப்கா’ உள்ளே அவர்களுக்கு சிறை காவலர்கள் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து பாகாயம் செல்லும் சாலையில் நின்று புகைப்படக்காரர்கள் சோதனை நடைபெற்ற வீட்டினை புகைப்படம் எடுத்தனர். அப்போதும், அங்கு வந்த சிறை காவலர்கள் படம் எடுக்கக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சோதனை மாலை 5 மணி வரை நீடித்தது. இதனிடையே வீட்டில் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் கேட்டபோது வீட்டில் பணம், நகை ஏதும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்தனர்.
சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story