மருத்துவ கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க சுப்ரீம் கோர்ட்டைதான் தமிழக அரசு அணுக வேண்டும்; தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம்
அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 2 இடங்களை அதிகரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டைதான் தமிழக அரசு அணுக வேண்டும்என்று சென்னை ஐகோர்ட்டில் தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
கல்விக்கட்டணம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதன்படி தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களால், கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதனால் அந்த மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
இதையடுத்து, தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய கல்வி கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்று கடந்த நவம்பர் 20-ந்தேதி அரசு அறிவித்தது.
சுப்ரீம் கோர்ட்டைதான்...
இந்த அறிவிப்பை முன்தேதியிட்டு அமல்படுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அரசு பள்ளி மாணவர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவ கல்லூரிகளில், தலா 2 இடங்களை அதிகரிப்பது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடம் உருவாக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டைதான் அணுக வேண்டும் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
முன்னுரிமை யாருக்கு?
தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், “அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழகத்தில் இருந்து வழங்கப்பட்ட இடங்களில், 227 இடங்கள் மீண்டும் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதில், 7.5 சதவீத இட ஒதுக் கீட்டின் கீழ், 26 இடங்கள் கிடைக்கும். இந்த 26 இடங் களை, 60 அரசு பள்ளி மாணவர்களுக்கு மறு கலந்தாய்வு நடத்தப்பட்டு ஒதுக்கப்படும் என்று கூறினார்
இதையடுத்து, நீதிபதி, “இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரிக்கப்படும். அப்போது, கலந்தாய்வில் கலந்துகொள்ள 60 மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும்? என தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story