சென்னையில் புதிதாக 14 கோர்ட்டுகள்; ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி திறந்து வைத்தார்


சென்னையில் புதிதாக 14 கோர்ட்டுகள்; ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 18 Dec 2020 4:54 AM IST (Updated: 18 Dec 2020 4:54 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் புதிதாக 14 கோர்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி திறந்து வைத்தார்.

14 புதிய கோர்ட்டுகள்
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் செயல்பட்டு வரும் சிட்டி சிவில் கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட நீதிபதி அந்தஸ்திலான நீதிபதிகள் விசாரிக்கும் வகையில் 4 கூடுதல் கோர்ட்டுகளும், அல்லிகுளம் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் கோர்ட்டில் சீனியர் சிவில் நீதிபதி அந்தஸ்திலான நீதிபதிகள் விசாரிக்கும் வகையில் 10 கூடுதல் உதவி கோர்ட்டுகளும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிபதி செல்வக்குமார் வரவேற்றார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கோர்ட்டுகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு நீதி விரைவாக கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதித்துறையின் செயல்பாடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் சென்னையில் புதிதாக 14 கோர்ட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது நீதித்துறை வரலாற்றில் ஒரு மைல்கல். புதிய கோர்ட்டுகள் உருவாக நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டு
வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான இலக்கை அடைவதற்கு புதிய கோர்ட்டுகள் உதவியாக இருக்கும். கொரோனா நோய் தொற்று காலத்திலும் நீதிமன்றம் சுமூகமாக செயல்பட்டு பொதுமக்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய நீதித்துறை பணியாளர்களுக்கும், வக்கீல்களுக்கும் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து நீதிமன்றம் சுமூகமாக செயல்பட வக்கீல்கள் தங்களது பங்களிப்பை அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் ஐகோர்ட்டு மூத்த நீதிபதி வினித்கோத்தாரி, நீதிபதி கோவிந்தராஜ், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை கலெக்டர் சீதாலட்சுமி, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் செங்குட்டுவன், செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில், சென்னை தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு சந்தோஷ் நன்றி கூறினார்.

Next Story