தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 லட்சம் விரலி மஞ்சள் சிக்கியது - வாலிபர் கைது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 லட்சம் விரலி மஞ்சள் சிக்கியது. இதுதொடர்பாக வாலிபரை கைது செய்த போலீசார், படகு, லோடு ஆட்டோ ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி,
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இலங்கையில் உற்பத்தியாகும் மஞ்சளைவிட, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மஞ்சள் தரமானதாக இருப்பதாகவும், அதனால் மக்கள் அதிகம் விரும்பி வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இலங்கையில் மஞ்சள் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து இலங்கை அரசு மஞ்சள் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்தது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் மஞ்சள் இறக்குமதிக்கு முற்றிலும் தடை விதித்து உள்ளது. இதனால் இலங்கையில் மஞ்சளுக்கு தேவைப்பாடு அதிகரித்து உள்ளது. இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் சுமார் ரூ.3 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் இருந்து சுங்கவரி ஏய்ப்புக்கும், கூடுதல் விலைக்காகவும் மஞ்சள் கடத்தல் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க தூத்துக்குடி கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் கடலோர பகுதியில் உள்ள போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் சமீபகாலமாக மஞ்சள் கடத்தல் அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கடத்த முயன்ற 10 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவங்களில் ஈடுபட்டதாக 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 3 லோடு ஆட்டோ, ஒரு மினி லாரி, நாட்டுப்படகு, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மஞ்சள் கடத்தல் நடப்பதாக தூத்துக்குடி வடபாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் திரேஸ்புரம் கடற்கரைக்கு விரைந்து சென்றனர். அப்போது, ஒரு லோடு ஆட்டோவில் இருந்த மூட்டைகளை வாலிபர் ஒருவர் படகில் ஏற்றிக் கொண்டு இருந்தார். உடனடியாக போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் தூத்துக்குடி காமராஜ் நகரை சேர்ந்த அன்புராஜ் (34) என்பது தெரியவந்தது. அவர் படகில் ஏற்றிய மூட்டைகளில் விரலி மஞ்சள் இருப்பது தெரியவந்தது. இதில் மொத்தம் 2 டன் மஞ்சள் இருந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் ஆகும்.
இந்த மஞ்சளை இலங்கைக்கு கடத்த இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அன்புராஜை கைது செய்தனர். பின்னர். படகு, லோடு ஆட்டோ, 2 டன் மஞ்சள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இந்த மஞ்சள் கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிடிபட்ட அன்புராஜ் மற்றும் மஞ்சளை சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story