மாவட்டத்தில் பரவலாக மழை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அறந்தாங்கியில் வீ்ட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
அறந்தாங்கி,
அறந்தாங்கி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை தொடர்ந்து மழை பெய்தது. மழைக்கு அறந்தாங்கி அருகே உள்ள விஜயபுரம் ஊராட்சி அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான நடராஜன் என்பவருக்கு சொந்தமான பசு மாடு மழை தண்ணீரில் மூழ்கி இறந்தது.
இதேபோல, விஜயபுரம் தெற்கு கண்ணாவூரணி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராணி என்பவரது வீட்டின் சுவர் தொடர் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது.
சுரங்கப்பாதை
கடந்த சில நாட்களாக பெய்த பருவ மழையினால் புதுக்கோட்டை அருகே ராசாவயல் பகுதியில் உள்ள சுரங்கபாதையில் மழைநீர் வடிய வழியின்றி தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியினால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி நகரப்பகுதிக்கு வரவேண்டி உள்ளது. மேலும் வாகனங்களும் செல்ல முடியவில்லை. சுரங்கபாதையில் தேங்கி கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்னவாசல்-ஆலங்குடி
அன்னவாசல் பகுதியில் நேற்று அதிகாலை தொடங்கி இரவு வரை தூறல் மழை பெய்தது. அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்தது. இந்த மழையால் இலுப்பூர் வாரச்சந்தையில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. வியாபாரிகள் கடை போடமுடியாமல் தவித்தனர். மழையால் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி கடைவீதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.
ஆலங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்துவரும் அடைமழையால் பொதுமக்கள், வியாபாரிகள், தினக்கூலிக்கு செல்லும் தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். மழையின் காரணமாக நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் குறைந்த அளவிலேயே வியாபாரம் நடைபெற்றது. இப்பகுதிகளி் 3 நாட்களாக மழை பெய்தும் ஏரி, குளங்கள் நிரம்பவில்லை.
மழை அளவு விவரம்
புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் பகலில் தூறல் மழை பெய்தது. தொடர்ந்து இரவில் மழை பெய்தப்படி இருந்தது. நேற்று முன்தினம் இரவில் மழை அதிகமாக பெய்தது. இந்த நிலையில் நேற்று பகலிலும் மழை தூறிய படி இருந்தது.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ஆதனக்கோட்டை-10, பெருங்களூர்-10.20, புதுக்கோட்டை-6.80, ஆலங்குடி-10.60, கந்தர்வகோட்டை-13, கறம்பக்குடி-20-.20, மழையூர்-11.40, கீழணை-35.80, திருமயம்-16.40, அரிமளம்-29.60, அறந்தாங்கி-7, ஆயிங்குடி-21.40, நாகுடி-26, மீமிசல்-11.80, ஆவுடையார்கோவில்-21.10, மணமேல்குடி-13, இலுப்பூர்-19, குடுமியான்மலை-10, அன்னவாசல்-4, விராலிமலை-11.20, உடையாளிப்பட்டி- 4.60, கீரனூர்-29, பொன்னமராவதி-4.40, காரையூர்-16.20.
Related Tags :
Next Story