திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த சாரல் மழை


திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த சாரல் மழை
x
தினத்தந்தி 18 Dec 2020 7:46 AM IST (Updated: 18 Dec 2020 7:46 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சாரல்போல மழை தூறிக்கொண்டே இருந்தது.

திருச்சி, 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை முதலே சூரியன் முகமே தெரியாத வகையில் வானத்தில் கருமேகக்கூட்டங்கள் காணப்பட்டன. இதனால், ஜிலுஜிலுவென இதமான சீதோஷ்ணமே நிலவியது.

மேலும் அவ்வப்போது சாரல்போல மழை ்தூறிக்கொண்டே இருந்ததால் பெரிய மழைக்கான நல்ல தொடக்கமாக இருந்தது. திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் மாலைவரை தொடர்ந்து சாரல்போல மழை தூறிக்கொண்ட நிலையே நீடித்தது.

வியாபாரம் பாதிப்பு

சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் குடை மற்றும் மழைகோட்டு அணிந்தபடி சென்றதை அதிக அளவில் காணமுடிந்தது. இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் சாரல் மழையால் சற்று அவதியடைந்தனர்.

மேலும் காந்தி மார்க்கெட் தற்போது செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பகலில் அங்கு வியாபாரத்தில் ஈடுபட்ட சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். மழை காரணமாக, அதிக அளவில் பொதுமக்கள் காந்தி மார்க்கெட் செல்வதை தவிர்த்தனர்.

சேறும், சகதியுமான சாலைகள்

இதுபோல திருச்சி பெரிய கடை வீதி, கூனி பஜார், என்.எஸ்.பி.ரோடு உள்ளிட்ட இடங்களில் சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சத்திரம் பஸ் நிலையம் நவீனப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருவதால், பயணிகள் ஒதுங்க இடமின்றி மழையில் நனைந்தபடி பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

திருச்சி மாநகரில் விஸ்தரிப்பு பகுதிகளில் பெரும்பாலும் தார்சாலைகள் அமைக்கப்பட வில்லை. மழை காரணமாக, சாலைகள் சேறும் சகதியுமாக காட்சி அளித்தன. திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் பிரதாசன் சாலையில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி பல்லங்குழி போல காட்சி அளித்தது. மழை காரணமாக, பல இடங்களில் கட்டிடப்பணிக்கு வந்த கட்டிட தொழிலாளர்கள், பணியை தொடர முடியாமல் வீடு திரும்ப நேர்ந்தது.

துறையூர்

இதுபோல் துறையூரில் நேற்று காலை 5 மணி முதல் மாலை வரை விட்டு, விட்டு மழை பெய்தது. இதில் நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் சரிவர தூர்வாரப்படாததால், அவை வழிந்து செல்ல வழியில்லாததால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

Next Story