நேரு யுவகேந்திராவின் இளையோர் மன்ற விருதுக்கு விண்ணப்பிக்கலாம் 22-ந் தேதி கடைசி நாள்


நேரு யுவகேந்திராவின் இளையோர் மன்ற விருதுக்கு விண்ணப்பிக்கலாம் 22-ந் தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 18 Dec 2020 4:31 AM GMT (Updated: 18 Dec 2020 4:31 AM GMT)

நேரு யுவகேந்திராவின் சிறந்த இளையோர் மன்ற விருதுக்கு வருகிற 22-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று குமரி மாவட்ட நேருயுவகேந்திரா இளையோர் ஒருங்கிணைப்பாளர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில், 

மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் குமரி மாவட்ட நேரு யுவகேந்திரா ஒவ்வொரு ஆண்டும் நேரு யுவகேந்திரா சார்பில் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் இளைஞர் மன்றம், சிறந்த இளைஞர் மன்றமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. சிறந்த மன்றமாக தேர்வு செய்யப்படும் மன்றம் ரூ.25 ஆயிரத்துக்கான விருது மற்றும் சான்றிதழ் பெறுகிறார்கள். மாவட்ட அளவில் முதல் பரிசை பெறும் மன்றம் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள். மாநில அளவில் முதல் பரிசை பெறும் மன்றம் ரூ.75 ஆயிரத்துக்கான விருதை பெறுகிறார்கள். மாநில அளவில் விருது பெறும் மன்றங்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.

தேசிய அளவில் வெற்றி பெறுபவர்கள் முதல் பரிசாக ரூ.3 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் பெறுவார்கள். தேசிய அளவில் வெற்றி பெறும் மன்றம் 2021-ம் ஆண்டு நடைபெறும் இளையோர் கலை விழாவின்போது இந்த விருதைப் பெறுவார்கள்.

சான்றுகள்

மாவட்ட அளவிலான விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மன்றங்கள் நேரு யுவ கேந்திராவில் இணைக்கப்பட்ட மன்றமாக இருக்க வேண்டும். முக்கியமாக தமிழ்நாடு அரசு பதிவு சட்டப்படி பதிவு பெற்ற மன்றமாக இருத்தல் வேண்டும். பதிவு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த வருடத்துக்கான விண்ணப்பங்களை நாகர்கோவில் பறக்கை ரோட்டில் அமைந்துள்ள பிரியா நகரில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான மன்ற செயல்பாடுகளை மட்டுமே குறிப்பிட வேண்டும். மேலும் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் அதற்கான சான்றுகளை இணைக்க வேண்டும்.

22-ந் தேதி கடைசி

பத்திரிக்கை செய்தி, புகைப்படம், சான்றிதழ் போன்றவைகளை அத்தாட்சிகளாக இணைக்கலாம். 2019- 2020-ம் ஆண்டுக்கான தணிக்கைச் சான்றிதழையும் அதனுடன் இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைந்த குழு ஆராய்ந்து விருதுக்கான மன்றத்தை தேர்வு செய்வார்கள். சிறந்த இளையோர் மன்ற விருதுக்கான விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி வருகிற 22-ந் தேதி ஆகும். ஏற்கனவே மாவட்ட அளவிலான சிறந்த மன்ற விருதைப் பெற்ற மன்றமும், அந்த விருது பெற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்திருந்தால் அவர்களும் இந்த விருதுக்காக விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story