புதுடெல்லியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பெண்கள் கோஷம் எழுப்பினர்
ஈரோட்டில் 4-வது நாளாக நடந்த காத்திருப்பு போராட்டத்தில் புதுடெல்லியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்திய பெண்கள், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஈரோடு,
மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி புதுடெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஈரோட்டில் கடந்த 14-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தின் 4-வது நாளாக நேற்றும் காலையில் இருந்தே விவசாயிகள், அரசியல் கட்சியினர் வந்து கலந்து கொண்டனர். குறிப்பாக நேற்று பெண் விவசாயிகள், பல்வேறு மகளிர் அமைப்பினர் அதிக அளவில் வந்து கலந்து கொண்டனர்.
நேற்றைய போராட்டத்துக்கு தி.மு.க. மகளிர் அணி பொறுப்பாளர் இளமதி தலைமை தாங்கினார். மாதர் சங்க பொறுப்பாளர்கள் பிரசன்னா, கோமதி உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தபெண்கள் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்கள்.
விளக்கேற்றி அஞ்சலி
போராட்டத்தில் ஒரு நிகழ்வாக, புதுடெல்லியில் தொடர் போராட்டத்தின் போது மரணம் அடைந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பெண்கள் அனைவரும் கைகளில் தீபம், மெழுகுவர்த்தி ஆகியவை மூலம் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். இதுபோல் அகல் விளக்குகள் ஏந்திய பெண்கள் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
போராட்டத்தை ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.எம்.முனுசாமி, கி.வே.பொன்னையன், சி.எம்.துளசிமணி, சுப்பு, முத்துசாமி, எஸ்.பொன்னுசாமி, அறச்சலூர் செல்வம் ஆகியோர் வழிநடத்தினார்கள்.
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி, மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
நேற்றைய போராட்டத்தில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு போராட்டக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இன்று (வெள்ளிக்கிழமை) 5-வது நாள்போராட்டம் நடக்கிறது.
Related Tags :
Next Story