கார் நிறுவன ஊழியர்கள் பணி நீக்கத்தை கண்டித்து ராமநகர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி


கார் நிறுவன ஊழியர்கள் பணி நீக்கத்தை கண்டித்து ராமநகர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 19 Dec 2020 3:14 AM IST (Updated: 19 Dec 2020 3:14 AM IST)
t-max-icont-min-icon

கார் நிறுவன ஊழியர்கள் பணி நீக்கத்தை கண்டித்து ராமநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு உண்டானது.

ராமநகர், 

ராமநகரில் டோயொட்டா கார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களை, கார் நிறுவனம் திடீரென பணி நீக்கம் செய்தது. இதனை கண்டித்து கார் நிறுவனம் முன்பு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களிடம் துணை முதல்-மந்திரியும், ராமநகர் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான அஸ்வத் நாராயண் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய கூடாது என்று கார் நிறுவனத்திற்கு கர்நாடக தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டு இருந்தது. இதனால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணிக்கு சேர்த்து கொள்ளப்பட்டனர். ஆனால் போராட்டத்தை முன்நின்று நடத்திய ஊழியர்கள் சங்க தலைவரை மீண்டும் பணியில் சேர்த்து கொள்ள நிறுவனம் மறுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களையும் மீண்டும் கார் நிறுவனம் பணி நீக்கம் செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 39 நாட்களாக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 40-வது நாளாக போராட்டம் நீடித்தது. ஊழியர்களின் இந்த போராட்டத்திற்கு விவசாய சங்க தலைவர் படகலபுரா நாகேந்திரா ஆதரவு தெரிவித்தார். மேலும் ஊழியர்களுக்கு ஆதரவாக, விவசாய சங்கத்தினரும் போராட்டம் நடத்தினர். பின்னர் கார் நிறுவன ஊழியர்களும், விவசாயிகளும் பேரணியாக ராமநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கார் நிறுவன ஊழியர்களையும், விவசாயிகளையும் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த படகலபுரா நாகேந்திரா உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் அமர்ந்து விவசாயிகளும், ஊழியர்களும் போராட்டம் நடத்தினர். பின்னர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story