டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழக விவசாயிகள் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் நேற்று கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் 23-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகவும், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நேற்று தமிழக விவசாயிகள் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதற்காக சென்னை சின்னமலை வேளச்சேரி பிரதான சாலையின் தென் பகுதியில் விவசாயிகள் அதே சாலையில், வடக்கு பகுதியில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி சிலையை நோக்கி பேரணியாக நடந்து வர முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்ததால், அங்கேயே அவர்கள் சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். அதைத் தொடர்ந்து விவசாயிகள் பேரணியாக நடந்து வர அனுமதிக்கப்பட்டனர்.
துண்டு பிரசுரம் வெளியீடு
பேரணியாக வந்தவர்கள் ராஜீவ்காந்தி சிலையை நெருங்குவதற்கு முன்னதாகவே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்த இடத்தில் வைத்து 3 வேளாண் சட்டங்களினால் ஏற்படும் பாதிப்புகளும், அவற்றிற்கான தீர்வுகளும் அடங்கிய துண்டு பிரசுரத்தை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் யுவராஜ் பெற்றுக் கொண்டார்.
பேரணியில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு பொதுச்செயலாளர் பாலாறு வெங்கடேசன், சென்னை மண்டல தலைவர் துரைசாமி, கடலூர் மண்டல தலைவர் வீராணம்
விநாயகமூர்த்தி, நெல்லை மண்டல தலைவர் புளியறை செல்லத்துறை, குமரி மண்டல தலைவர் வின்ஸ் ஆன்டோ, தமிழக காவிரி விவசாய சங்க தலைவர் புண்ணியமூர்த்தி, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் தாஜுதீன், ஆம் ஆத்மி மாநில ஒருங்கிணைப்பாளர் சுதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டங்கள் ஓயாது
பேரணியின் போது, பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பில் இருந்து மத்திய அரசு விலகிக் கொள்ளும். தற்போது நடைமுறையில் உள்ள இரட்டை கொள்முதல் முறையும் ஒழிக்கப்படும். ஒப்பந்த சாகுபடி முறை என்ற பெயரில் விவசாய நிலங்கள் அபகரிக்கப்படும். மேலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தி ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுப்பதற்கு விளைநிலங்களை பயன்படுத்துவார்கள்.
ஒட்டுமொத்த விவசாயிகளும் அகதிகளாக வெளியேறுவார்கள். ஒட்டு மொத்த வணிகர்களின் உரிமைகளும், வாழ்வாதாரமும் பறிபோகும். இந்திய விவசாயிகள் அந்நிய முதலாளிகளால் அடிமைப்படுத்தப்படும் மிக மோசமான சட்டம். எனவே, இந்த சட்டங்கள் திரும்பப்பெறும் வரை இந்தியாவில் போராட்டங்கள் ஓயாது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சியில் ஆர்ப்பாட்டம்
விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறும்போது, “மத்திய அரசு டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை நிறுத்த வேண்டும். இல்லை என்றால், வருகிற 22-ந் தேதி திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதன் தொடர்ச்சியாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். அதன் பிறகும், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் நிறுத்தப்படவில்லை எனில், கடை அடைப்பு போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம்” என்றார்.
போலீசார் உணவை சாப்பிட மறுப்பு
பேரணியில் கலந்து கொண்டவர்கள் கவர்னர் மாளிகை நோக்கி முன்னேறி செல்லும் போது, போலீசாரால் கைது செய்யப்பட்டு வேளச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். மொத்தம் 280 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், 10 அம்ச பாதிப்புகளும், அவற்றிற்கான 9 அம்ச தீர்வுகளின் ஆங்கில பிரதியை கவர்னருக்கு வழங்க பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கைது செய்யப்பட்டிருந்த விவசாயிகள் போலீசார் வழங்கிய டீ, சாப்பாடு ஆகியவற்றை சாப்பிட மறுத்து அந்த சாப்பாட்டை அப்புறப்படுத்துமாறு கோஷம் எழுப்பினர்.
பின்னர், தங்கள் சார்பில் மதிய உணவை வரவழைத்து அதனை சாப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
புதிய வேளாண் சட்டங்களினால் ஏற்படும் 10 அம்ச பாதிப்புகளும், அவற்றிற்கான 9 அம்ச தீர்வுகளின் ஆங்கில பிரதியை கவர்னருக்கு வழங்க பி.ஆர்.பாண்டியனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை, கிண்டி உதவி போலீஸ் கமிஷனர் சுப்புராயன், அந்த ஆங்கில பிரதியை பி.ஆர்.பாண்டியனிடம் இருந்து பெற்று, கவர்னரின் பாதுகாப்பு அதிகாரியிடம் வழங்கியதாக தெரிகிறது.
Related Tags :
Next Story