ஒரகடம் அருகே ரூ.2 லட்சம் கேட்டு கடைக்காரர் கடத்தல்; 4 பேர் கைது
ஒரகடம் அருகே ரூ.2 லட்சம் கேட்டு கடைக்காரர் கடத்தப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடத்தல்
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவேரியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 49), இவர் அதே பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை முருகன் மீன் கடையில் இருந்து வீட்டுக்கு செல்லும் போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கத்தி முனையில் அவரை மிரட்டி பணம் கேட்டு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர்.
கடத்தி சென்ற மர்ம நபர்கள் ரூ.2 லட்சம் வேண்டும் என முருகனின் மனைவியிடம் கேட்டுள்ளனர்.
முருகன் கடத்தப்பட்டது குறித்து ஒரகடம் போலீசில் முருகனின் மனைவி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.
4 பேர் கைது
இந்த நிலையில் முருகனை மீட்க அவருடைய நண்பர் வினோத் பணத்தை எடுத்துக்கொண்டு அவரை கடத்தி வைத்திருந்த திருமுக்கூடல் அருகே உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றார்.
போலீசாரும் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்ட கடத்தல் கும்பல் முருகனை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் சுற்றி வளைத்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை மடக்கி பிடித்தனர். பிடிபட்ட 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வாலாஜாபாத் அங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த செந்தில் (27), உத்திரமேரூர் வயலக்காவூரை சேர்ந்த மொய்தீன்(49), எடநொச்சி பகுதியை சேர்ந்த 18 வயதான 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணை செய்ததில் முருகனிடம் பணம் கேட்டு அவரை கடத்தியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story