திருவண்ணாமலையில் ரூ.5¼ கோடியில் கட்டப்பட்ட வாக்குப்பதிவு எந்திர கிடங்கு; கலெக்டர் திறந்து வைத்தார்


வாக்குப்பதிவு எந்திர கிடங்கை கலெக்டர் சந்தீப்நந்தூரி குத்து விளக்ேகற்றி திறந்து வைத்த போது
x
வாக்குப்பதிவு எந்திர கிடங்கை கலெக்டர் சந்தீப்நந்தூரி குத்து விளக்ேகற்றி திறந்து வைத்த போது
தினத்தந்தி 19 Dec 2020 9:53 AM IST (Updated: 19 Dec 2020 9:53 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் ரூ.5 கோடியே 34 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வாக்குப்பதிவுஎந்திர கிடங்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்.

வாக்குப்பதிவு எந்திர கிடங்கு
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பொதுப்பணித் துறை மூலம் ரூ.5 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப் பதிவு எந்திர கிடங்கு கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் தரை தளத்தில் கழிப்பறை வசதியுடன் பாதுகாப்பு அறை, முதல் மற்றும் 2-ம் நிலை சோதனை அறை, பொருட்கள் ஏற்றும் லிப்ட் வசதி, சேமிப்பு கிடங்கு மற்றும் பொது கழிப்பறை வசதியுடனும், முதல் தளத்தில் சேமிப்பு கிடங்கு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது.

இந்த கிடங்கை நேற்று மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சந்தீப்நந்தூரி குத்துவிளக்கேற்றி வைத்து திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-
கண்காணிப்பு கேமரா
இந்த புதிய வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் 5 ஆயிரத்து 40 கட்டுப்பாட்டு எந்திரம், 9 ஆயிரத்து 320 வாக்குச்சீட்டு எந்திரம் மற்றும் 4 ஆயிரத்து 924 வாக்காளர் அளித்த வாக்கினை உறுதி செய்யும் எந்திரம் ஆகிய மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டு உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் இங்கு ஒரே இடத்தில் வைக்கப்படும் போது அவற்றின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

மேலும் இந்த கிடங்கு தொடர்ந்து கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இது உள்ளதால் உயர் அதிகாரிகள் அடிக்கடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கு வசதியாக இருக்கும். சட்டமன்ற தேர்தலுக்கு நமது மாவட்டத்திற்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் ஆணையம் மூலம் கொடுக்கப்படும். முதல்கட்டமாக மராட்டிய மாநிலத்தில் இருந்து வரும் வாக்குப்பதிவு எந்திரங்கள் இங்கு சேமித்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
வருகிற ஜனவரி 20-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்த நடந்து முடிந்த சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும், நீக்கும் பணிகள் நடக்கிறது. மேலும் தேர்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிமளா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணமூர்த்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story