நாமக்கல் ஒன்றியத்தில் ஜல்ஜீவன் இயக்க திட்டத்தில் 1,533 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி; கலெக்டர் மெகராஜ் ஆய்வு
நாமக்கல் ஒன்றியத்தில் ஜல்ஜீவன் இயக்க திட்டத்தில் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் 1,533 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் 8 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 15 குக்கிராமங்களில் ஜல் ஜீவன் இயக்க திட்டத்தின் கீழ் 1,533 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் வள்ளிபுரம் ஊராட்சியில் ரூ.7 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ள பணிகளையும், தொட்டிப்பட்டி ஊராட்சி கொக்கர செல்லியூரில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியையும் மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது வீடுகளுக்கு குடிநீர் சீரான அழுத்தத்தில் கிடைக்க திட்ட வழிகாட்டியின்படி வால்வுகள் மற்றும் குழாய்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளனவா?, குடிநீர் குழாய்கள் சரியான முறையில் பதிக்கப்பட்டு உள்ளனவா?, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் சீரான அழுத்தத்தில் குடிநீர் வழங்க தேவையான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா?, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளில் குடிநீர் சரியாக வருகின்றதா? என்று நேரில் பார்வையிட்டு உறுதி செய்தார்.
சுயஉதவிக்குழு கட்டிடம்
பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வசந்தபுரம் ஊராட்சி ரோஜா நகரில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுயஉதவிக்குழு கட்டிட பணியையும், வீசாணம் ஊராட்சியில் ரூ.3½ லட்சம் மதிப்பீட்டில் நடப்பட்டு உள்ள பல்வேறு வகையிலான மரக்கன்றுகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.
இந்த ஆய்வுகளின் போது நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோகன், தேன்மொழி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமதி, இளங்கோ உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story