நாமக்கல் மாவட்ட பகுதிகளில் அம்மா மினி கிளினிக்; அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்
ஓலப்பாளையம், சவுதாபுரம், புதுப்பாளையம், ஆனங்கூர் ஆகிய பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
திறப்பு விழா
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓலப்பாளையம், சவுதாபுரம், புதுப்பாளையம் மற்றும் ஆனங்கூர் ஆகிய நான்கு இடங்களில் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு 4 அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் 53 இடங்களில் மினிகிளினிக்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 18 இடங்களில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் தற்போது உள்ள 63 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 9 அரசு மருத்துவமனைகள் அமைந்துள்ள இடங்கள் தவிர தொலைதூர கிராமங்களில் மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களுக்கு பொதுமக்களின் தேவை அடிப்படையில் மினி கிளினிக்குகள் அமைவிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உடல்நலத்தை பாதுகாக்கவும்
ஊரக பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் செயல்படும். நகர்ப்புறப் பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் செயல்படும். சனிக்கிழமை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் அமையவுள்ள இந்த மினி கிளினிக்குகளில் வழங்கப்படும் சேவைகளை பயன்படுத்தி உடல் நலத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும். இந்தப் பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.400 கோடி மதிப்பில் மேட்டூர் அருகே பூலாம்பட்டியில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு வழங்கப்பட உள்ளது. இப்பகுதி மக்கள் மருத்துவ வசதிக்காக அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் இங்கேயே சிகிச்சை பெற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில், துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம், திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் திருமூர்த்தி, அரசு வக்கீல் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story