கர்நாடகத்தில் தனிக்கட்சி தொடங்கி சித்தராமையாவால் 10 தொகுதிகளில் வெற்றி பெற முடியுமா? குமாரசாமி சவால்
கர்நாடகத்தில் தனிக்கட்சி தொடங்கி 10 தொகுதிகளில் சித்தராமையாவால் வெற்றி பெற முடியுமா? என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சவால் விடுத்துள்ளார்.
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறும் கருத்துகளுக்கு பதில் அளிக்க கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் பேசிய சித்தராமையா, 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு முதல்-மந்திரி பதவியை காங்கிரஸ் விட்டு கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த கருத்தை அடிக்கடி சித்தராமையா கூறி வருகிறார்.
37 தொகுதிகள் ஆகட்டும், 100 தொகுதிகள் ஆகட்டும், மக்கள் நினைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை சித்தராமையா புரிந்து கொள்ள வேண்டும். சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் பா.ஜனதாவுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சி உள்ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார்.
பாதாமி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால், அங்கு உள் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை, சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்ததால் உள்ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கும், என்னை முதல்-மந்திரி பதவியில் இருந்து கீழே இறக்குவதற்கும் தன்னுடைய வீட்டில் இருந்து திட்டமிட்டவர் சித்தராமையா. உள்ஒப்பந்தம் பற்றி சித்தராமையா பேசுவதற்கு தகுதி கிடையாது.
ஜனதாதளம் (எஸ்) கட்சி யாருடனும் உள் ஒப்பந்தம் செய்து கொண்டது கிடையாது. மக்களுடன் மட்டுமே எப்போதும் உள்ஒப்பந்தம் செய்து கொண்டோம். மக்கள் ஆதரவுடன் தான் ஜனதாதளம் (எஸ்) கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சித்தராமையாவால் தனிக்கட்சி தொடங்கி 10 தொகுதிகளில் வெற்றி பெற்று காட்ட முடியுமா?. உங்களுக்கு அதற்கான சாமர்த்தியம் இருக்கிறதா?.
அவ்வாறு வெற்றி பெற்று காட்டிய பின்பு ஜனதாதளம் (எஸ்) கட்சியை பற்றியும், எங்களது கட்சியின் தலைவர்கள் பற்றியும் சித்தராமையா பேசட்டும். நான், முதல்-மந்திரியாக இருந்த போது ஓட்டலில் இருந்து பணியாற்றியதாக சித்தராமையா கூறி இருக்கிறார்.
ஓட்டலில் இருந்து பணியாற்றவில்லை, அங்கு இரவில் மட்டுமே தங்கினேன். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியையும் ஓட்டலில் நடத்தினேனா?. சித்தராமையா 6 மணிக்கு எல்லாம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்று விடுவார். நான் நள்ளிரவு 12 மணிவரை அலுவலகத்தில் இருந்து பணியாற்றினேன். முதல்-மந்திரி பதவியை இழந்த பின்பும் அரசு அலுவலகத்தை காலி செய்யாமல் சித்தராமையா இருந்தது ஏன்? என்பதை விளக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story