கர்நாடகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு ஜனவரி 1-ந் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


கர்நாடகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு ஜனவரி 1-ந் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Dec 2020 4:30 AM IST (Updated: 20 Dec 2020 3:57 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் 9 மாதங்களுக்கு பிறகு ஜனவரி 1-ந் தேதி முதல் திறக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவலுக்கு மத்தியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதனால் நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் கர்நாடகத்தில் கொரோனா அலை 2-வது கட்டமாக எப்படி உள்ளது என்பதை பொறுத்து பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என்று அரசுக்கு நிபுணர்கள் குழுவினர் ஏற்கனவே சில பரிந்துரைகளை வழங்கி இருந்தனர்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்தது. இதையடுத்து, கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நேற்று மதியம் கிருஷ்ணா இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளி, கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிபுணர் குழுவை சேர்ந்தவர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

முதலில் நிபுணர் குழுவின் பரிந்துரைகள் குறித்து அதிகாரிகளுடன், எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அதாவது பொதுத்தேர்வு நடைபெறுவதால் 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. 2-ம் ஆண்டு வகுப்புகளை புத்தாண்டு முதல் (ஜனவரி 1-ந்தேதி) தொடங்கலாம் என்று நிபுணர் குழுவினர் தெரிவித்திருந்தனர். அந்த குழுவினர் பரிந்துரையின்படியே கர்நாடகத்தில் புத்தாண்டில் இருந்தே 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. 2-வது ஆண்டுக்கான வகுப்புகளை தொடங்குவது என்றும், இதற்காக பள்ளி, கல்லூரிகளை திறப்பது என்றும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக நிபுணர் குழுவினர் அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கி இருந்தனர். அதுகுறித்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, கர்நாடகத்தில் புத்தாண்டான ஜனவரி 1-ந் தேதி முதல் 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான வகுப்புகளை தொடங்கி நடத்துவதற்காக பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும். 6-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை வித்யாகமா திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடத்துவதற்கும் நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்திருந்தனர். அதன்படி, 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை வித்யாகமா திட்டத்தின் கீழ் புத்தாண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதால், அதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பள்ளி, கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்த பிறகு பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவு செய்யலாம் என்று நிபுணர் குழுவினர் தெரிவித்திருந்தனர். இதற்காக டிசம்பர் 3-வது வாரம் வரை பொறுத்திருப்போம் என்றும் நிபுணர் குழுவினர் தெரிவித்திருந்தனர். பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக நிபுணர் குழுவினர் அரசுக்கு அளித்திருந்த பரிந்துரைகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. பொதுத்தேர்வு காரணமாக 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான வகுப்புகள் புத்தாண்டு முதல் தொடங்கப்படுகிறது.

புத்தாண்டு முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டாலும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவு கட்டாயமில்லை. 6 முதல் 9-ம் வகுப்பு வரை வித்யாகமா திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடைபெறும். பள்ளிகளின் வளாகத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வித்யாகமா திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடைபெறும். வித்யாகமா திட்டத்தின் கீழ் மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிகளுக்கு வரவேண்டும் என்ற கட்டாயமில்லை. தனியார் பள்ளிகளிலும் வித்யாகமா திட்டம் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வித்யாகமா திட்டம் குறித்து கர்நாடக ஐகோர்ட்டுக்கு பள்ளி, கல்வித்துறை சார்பில் முழு விவரம் அளிக்கப்பட்டுள்ளது. வித்யாகமா திட்டத்தின் கீழ் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பது குறித்து பெற்றோர் முடிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டம் இருந்தாலும், ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் காய்ச்சல், இருமல் இருந்தால் அனுமதி கிடையாது. வித்யாகமா திட்டத்தின் கீழ் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படமாட்டாது. மாணவர்களின் வீடுகளுக்கே மதிய உணவு வழங்கப்படும். வித்யாகமா திட்டத்தின் கீழ் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் இருந்து கண்டிப்பாக அனுமதி கடிதம் பெற்று வரவேண்டும்.

கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை சுகாதாரத்துறை, போக்குவரத்து துறையுடன் சேர்ந்து வெற்றிகரமாக நடத்தி இருந்தோம். அதுபோல, தற்போதும் அனைத்து துறைகளின் உதவியுடன் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகிறது. மாணவர்களின் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல, மாணவர்களின் எதிர்காலமும் முக்கியம். இந்த 2 முக்கிய அம்சங்களையும் கல்வித்துறை ஆராய்ந்து தான் பள்ளிகளை திறக்க முன்வந்துள்ளது. கொரோனா பரவல் இன்னும் மாநிலத்தில் இருப்பதால் சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகள்படி பள்ளிகள் திறக்கப்படும். மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திலும் முழு கவனம் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story