அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த பா.ஜ.க. மாநில தலைவர் முருகனுக்கு, ெதாண்டர்கள் உற்சாக வரவேற்பு
அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த பா.ஜ.க. மாநில தலைவர் முருகனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டத்திற்கு, விவசாயிகளின் நண்பன் மோடி என்ற விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் நேற்று வருகை தந்தார். அவருக்கு ஜெயங்கொண்டம் 4 ரோடு சந்திப்பில் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதற்கிடையே மாற்றுக்கட்சியினர் அவரது முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் கழுமங்கலம் தொழிலதிபர் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திகேயன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் பரமேஸ்வரி ஆனந்தராஜ், நகர தலைவர் ராமர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தா.பழூர்
இதேபோல் தா.பழூர் ஒன்றியத்திற்கு வந்த பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகனுக்கு, மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு தலைவர் இளையராஜா ஏற்பாட்டின்பேரில் சுமார் 50 டிராக்டர்களில் அணிவகுத்து நின்று விவசாயிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை பார்த்து உற்சாகம் அடைந்த மாநில தலைவர் எல்.முருகன், அவரது காரில் இருந்து இறங்கி மேளதாளங்கள் முழங்க விவசாயிகள் கொடுத்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் அணிவகுப்பில் முதலில் நின்ற ஒரு டிராக்டரில் ஏறி அமர்ந்து, டிராக்டரை இயக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் காரில் பயணித்த அவருக்கு அனைக்குடம் கிராமத்தில் பெண்கள் ரோஜா பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக அவருடைய காருடன் அணிவகுத்த இருசக்கர வாகனங்களை போலீசார் அனுமதிக்க மறுத்ததால் தா.பழூரில் சாலை மறியல் முயற்சி நடந்தது. போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
கருத்தரங்கு
பின்னர் பாரதீய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகளின் நண்பன் மோடி என்ற கருத்தரங்கு தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில் மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மோடி அரசு விவசாயிகளின் நண்பனாக திகழ்கிறது. வேளாண் சட்டங்கள் முழுமையாக விவசாயிகளுக்கு பயன்படும். விளைவித்த பொருளுக்கு உரிய ஆதார விலை நிச்சயம் கிடைக்கும், என்றார். முன்னதாக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் வரதராஜன், மாநில விவசாய அணி தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு தா.பழூர் கிழக்கு ஒன்றிய தலைவர் அரங்கநாதன் ஏற்பாடு செய்திருந்தார்.
முன்னதாக மாநில தலைவர் முருகன் நிருபர்களிடம் கூறுகையில், பாரதீய ஜனதா கட்சிக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன. தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். தி.மு.க.வை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் கூட்டணி குறித்தும், முதல்- அமைச்சர் வேட்பாளர் குறித்தும் கட்சியின் தேசிய தலைமை முடிவெடுக்கும், அறிவிக்கும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறேன், என்றார்.
நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட எல்.முருகன் மாலை 4 மணிக்கு கும்பகோணம் புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story