தொடர் மழையால் நிலக்கடலை பயிரிடமுடியாமல் விவசாயிகள் அவதி


தொடர் மழையால் நிலக்கடலை பயிரிடமுடியாமல் விவசாயிகள் அவதி
x
தினத்தந்தி 20 Dec 2020 5:40 AM IST (Updated: 20 Dec 2020 5:40 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் நிலக்கடலை பயிரிடமுடியாமல் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆலங்குடி,

ஆலங்குடி பகுதியில் நிலக்கடலை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. கார்த்திகை பட்ட நிலக்கடலை பயிர் செய்ய ஐப்பசி மாதத்தில் புஞ்செய் நிலங்களை உழுது தொழு உரம் போட்டு மண்ணைப் பண்படுத்துவது வழக்கம். இந்த ஆண்டு நிலத்தை உழவு செய்ய ஐப்பசியில் மழை இல்லை. கார்த்திகையில் மழை பெய்ய ஆரம்பித்ததும் விவசாயிகள் நிலத்தை உழவு செய்ய ஆரம்பித்தார்கள்.

ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் உழுது மண்ணைக் காயவிட்டு பாத்தி கட்ட முடியவில்லை. மேலும் தொடர்ந்து மழை பெய்துகொண்டு இருப்பதால் நிலக் கடலை பயிர்செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் இருந்து நிலக்கடலை விதைகளை வாங்கி தயார் நிலையில் வைத்துள்ளனர். ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதனை பயிரிட முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

பூக்கள் உற்பத்தி பாதிப்பு

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், காட்டுமல்லிகை எனப்படும் காக்கரட்டான், பிச்சி, அரளி, ரோஜா, சம்பங்கி உள்ளிட்ட பூச்செடிகள் நடப்பட்டுள்ளன. தொடர் மழையால் இந்த பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதராகிய நெற்பயிர்

வடகாடு, கீழாத்தூர், மாங்காடு, அனவயல், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெற் பயிர்கள் எட்டுக்கால் பூச்சி மற்றும் இனந்தெரியாத நோய் தாக்குதல் காரணமாக நல்ல முறையில் வளர்ந்து வந்த இளம் பயிர்கள் கூட பதராகி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கத்தரி பாதிப்பு

இதேபோல் வடகாடு பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கத்தரி செடிகள் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இவற்றை கட்டுப்படுத்த வழியின்றி விவசாயிகள் கத்தரி செடிகளை வேரோடு பிடுங்கி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Next Story