7-வது பொருளாதார கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்


காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார்
x
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார்
தினத்தந்தி 20 Dec 2020 5:57 AM IST (Updated: 20 Dec 2020 5:57 AM IST)
t-max-icont-min-icon

7-வது பொருளாதார கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. தமிழகத்திலும் இந்த பணியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக கவர்னர் தொடங்கிவைத்தார். அதனை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணிக்காக மேற்பார்வையாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு 2 கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள 13 வட்டாரங்களில் உள்ள 633 கிராம ஊராட்சிகளிலும், நகர்புறத்தில் 242 அலகுகளாக பிரிக்கப்பட்டு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.

இந்த கணக்கெடுப்பில் குறிப்பாக வணிக நிறுவனங்களில் உற்பத்தி வினியோகம் விற்பனை மற்றும் சேவை நோக்கத்தோடு செய்யவும் அனைத்து வகையான பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வணிக நிறுவனங்களை பற்றிய கணக்கெடுப்பு ஆகும். கணக்கெடுப்பு பணி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாகும்.

ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
இந்த கணக்கெடுப்பில் குடும்பத்தலைவரின் பெயர், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, கல்வித்தகுதி, வயது, இனம், சமூகப்பிரிவு, கைபேசி எண், செய்யும் தொழில், சுய தொழில் முதலீடுகள் மற்றும் வேலை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை, வருமான வரித்துறை பதிவு எண், சரக்கு மற்றும் சேவை வரி பதிவு எண் கொண்ட விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

இந்த கணக்கெடுப்புக்கு வழங்கப்படும் விவரங்கள் முற்றிலும் அரசின் பொருளாதார திட்டமிடலுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இந்த கணக்கெடுப்பை தேசிய புள்ளியியல் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மேற்பார்வையின் கீழ் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

எனவே கணக்கெடுப்பாளர்களிடம் தேவையான புள்ளி விவரங்களை வழங்கி நாட்டின் வளர்ச்சிக்கும் மாவட்ட வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் பொருட்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையாவும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story