காரைக்காலில் சம்பவம்: முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மனைவி ஆற்றில் குதித்து தற்கொலை - குடும்ப பிரச்சினை காரணமா?
காரைக்காலில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரின் மனைவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
காரைக்கால்,
காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் காந்தி சாலையை சேர்ந்தவர் வி.எம்.சி.வி. கணபதி (வயது62). இவர் புதுச்சேரி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர். மாநில முன்னாள் அ.தி.மு.க. செயலாளர் ஆவார். இவரது மனைவி அருமைக்கண்ணு (வயது 61). இவர்களது மகன், மகள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். சமீப காலமாக கணபதி தீவிர அரசியல் பணிகளில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.
இந்தநிலையில் கணவன், மனைவி இருவரும் திரு-பட்டினத்தில் வசித்து வந்தனர். சமீபகாலமாக இருவருக்குமிடையே மன வருத்தம் காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருமைக்கண்ணு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி வந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் அருமைக்கண்ணு திடீரென்று மாயமானார். அவரை காணாமல் அதிர்ச்சி அடைந்த கணபதி பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனாலும் அருமைக்கண்ணுவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து திரு-பட்டினம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து அருமைக்கண்ணுவை தேடி வந்தனர்.
இதையொட்டி திருமலைராஜன் ஆற்று கரையோரத்தில் செருப்புகள் கிடந்ததைப்பார்த்து ஆற்றில் நேற்று முன்தினம் போலீசார் அவரை தேடினர். இரவாகி விட்டதாலும், ஆற்றில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக காணப்பட்டதாலும் தேடும் பணி நிறுத்தப்பட்டு, நேற்று காலை தீயணைப்புத்துறையினர் மீனவர்கள் உதவியுடன் மீண்டும் தேடினர்.
அப்போது திருமலைராஜன் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை அருகே ஆற்றின் கரையோரத்தில் முட்புதரில் அருமைக்கண்ணுவின் உடல் சிக்கி கரை ஒதுங்கி இருந்தது தெரிய வந்தது. மீனவர்களின் உதவியுடன் அவரது உடல் மீட்கப்பட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அருமைக்கண்ணு தற்கொலைக்கு குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story