தொடர்ந்து கொட்டி தீர்க்கும் மழை: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் அழுகி வீணாகும் அவலம் விவசாயிகள் கண்ணீர்
தொடர்ந்து கொட்டி தீர்க்கும் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் அழுகி வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
கோட்டூர்,
பல ஆண்டுகளுக்கு பிறகு குறித்த நேரத்தில் திறக்கப்பட்ட மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை ஆர்வத்துடன் தொடங்கினார்கள்.
மேட்டூர் அணை பல முறை நிரம்பி, இடையிடையே மழையும் பெய்து வந்ததால் சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகளும் தடையின்றி நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நிவர், புரெவி என அடுத்தடுத்து உருவான புயல்களால் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
அழுகி வீணாகும் நெல்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள பெருகவாழ்ந்தான், மண்ணுக்குமுண்டான், பாலையூர், கெழுவத்தூர், குறிச்சி, குலமாணிக் கம், சேந்தங்குடி, விக்கிரபாண்டியம், திருக்களார், அக்கரை கோட்டகம், சீலத்தநல்லூர், களப்பால், நானலூர், கும்மட்டிதிடல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் எக்டேரில் நேரடி நெல் விதைப்பு மூலமாக சம்பா பயிரிடப்பட்டிருந்தது.
இந்த பகுதியில் அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் விளைந்திருந்த நிலையில் கனமழை பெய்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
விடுபடாமல் கணக்கெடுப்பு...
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘ சம்பா நெற்பயிர்கள் அனைத்தும் மழையால் சாய்ந்து கிடக்கின்றன. வயலிலேேய நெல் மணிகள் முளைத்து, அழுகி வீணாகும் அவலம் நேர்ந்துள்ளது. பெருமளவுக்கு மகசூல் இழப்பை சந்தித்துள்ளோம். வேளாண் துறை அதிகாரிகள் விடுபடாமல் பாதிப்புகளை கணக்கெடுத்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story