மயிலாடுதுறை அருகே ரூ.35 ஆயிரம் கையாடல் செய்ததாக பெண் தபால் அலுவலர் மீது வழக்கு
மயிலாடுதுறை அருகே ரூ.35 ஆயிரம் கையாடல் செய்ததாக பெண் தபால் அலுவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாடுதுறை,
நாகை மாவட்டம் வேதாரண்யம் மேல தெருவை சேர்ந்தவர் கருணாநிதி மகன் ஜீவாஅமுதன் (வயது 33). இவர், மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறை பெரியமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வாசுதேவன் மகள் சரண்யா. இவர், நல்லத்துக்குடி கிராமத்தில் கிராம தபால் அலுவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2017-ம் ஆண்டு அக்டோபர் வரை பணியில் இருந்தபோது நல்லத்துக்குடி பகுதியை சேர்ந்த இளங்கவி மகள்கள் வந்தனா, யாழினி ஆகியோரது பெயரில் சேமிப்பு கணக்கில் பணம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் சேமிப்பு கணக்கில் தலா 17 ஆயிரத்து 500 தொகை என ரூ.35 ஆயிரம் தொகையை அஞ்சல் அலுவலகத்தில் சரண்யா வரவு வைக்காமல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
வழக்கு
இதுதொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பின்னர் சரண்யா வட்டியுடன் ரூ.35 ஆயிரம் தொகையை அஞ்சல் அலுவலகத்தில் கட்டியுள்ளார். இதுதொடர்பாக தபால் துறை சார்பில் விசாரணை நடந்து, சரண்யா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இந்தநிலையில் அஞ்சல் ஆய்வாளர் ஜீவாஅமுதன் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சரண்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story