தஞ்சை மாவட்டத்தில் தொடர்மழையால் வயல்களிலேயே அழுகிக்கிடக்கும் பரங்கிக்காய்கள்
தஞ்சை மாவட்டத்தில் தொடர்மழையால் வயல்களிலேயே பரங்கிக்காய்கள் அழுகிக்கிடக்கிறது. பறித்து வைக்கப்பட்ட பரங்கிக்காய்களை வாங்க வியாபாரிகள் வராததால் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரங்கிக்காய், பூசணிக்காய் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் பூசணிக்காய் என்பது வெள்ளைப்பூசணி ஆகும். இந்த வகை பூசணிக்காய் சமையல், திருஷ்டி கழிக்க மற்றும் பூஜை போன்ற நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது உண்டு.
பரங்கிக்காய் என்பது சமையலில் மட்டும் பயன்படுத்துவது. தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, கண்டியூர், நடுக்காவேரி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில் உள்ளிட்ட பகுதிகளில் பரங்கிக்காய் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
அறுவடை பணிகள்
இந்த பரங்கிக்காய் சாகுபடி காலம் 3 மாதங்கள் ஆகும். விதைகள் போடப்பட்டு 40 நாட்களில் செடிகள் வளர்ந்து காய்க்க தொடங்கி விடும். 3 மாதத்தில் அறுவடை செய்யப்படும். 2 கிலோ எடை முதல் 15 கிலோ எடை வரையில் இருக்கும். தற்போது சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் பரங்கிக்காய் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.
வழக்கமாக இந்த பகுதிகளில் விளையும் பரங்கிக்காய்களை கொள்முதல் செய்வதற்காக சென்னை, மதுரை போன்ற நகரங்களில் இருந்து வந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து செல்வார்கள். திருச்சி பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வந்து கொள்முதல் செய்வார்கள்.
தொடர் மழை
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நிவர், புரெவி புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாகவும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வயல்கள் அனைத்தும் தண்ணீர் நிரம்பி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த மழையினால் நெல், நிலக்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த மழை காரணமாக பரங்கிக்காய்களும் சேதம் அடைந்துள்ளன. ஆங்காங்கே வயல்களிலேயே பரங்கிக்காய்கள் அழுகிய நிலையில் காணப்படுகின்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பரங்கிக்காய்களை அறுவடை செய்ய முடியவில்லை. அறுவடை செய்த பரங்கிக்காய்களையும் வியாபாரிகள் வாங்க வராததால் வயல்களிலேயே குவித்து வைக்கப்பட்டு உள்ளன..
வியாபாரிகள் வாங்கவில்லை
குவித்து வைக்கப்பட்டு இருக்கும் பரங்கிக்காய்களும் அழுகி காணப்படுகிறது. 4 நாட்களுக்கு ஒருமுறை அவற்றை விவசாயிகள் தரம் பிரித்து வைத்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் பரங்கிக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பரங்கிக்காய் கிலோ ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கிலோ ரூ.4-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மேலும் 1 ரூபாய் குறைத்து விற்கப்படுகிறது. குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் வியாபாரிகள் யாரும் வாங்குவதற்கும் வருவதில்லை. நாளுக்கு நாள் கடுமையான இழப்புகளை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story