திருப்பூரில் 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது
திருப்பூரில் 300 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் புகையிலை பொருட்களின் விற்பனை செய்யப்படுவதாகவும், விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்யவும் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருப்பூர் மாநகர பகுதியில் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று திருப்பூர் ஊரக போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வி.ஜி.வி. கார்டன் ராக்கியாபாளையம் பிரிவு பகுதியில் ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள் இதில் அந்த வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த ஜெபசிங் (வயது 37) என்பவரை கைது அவரிடமிருந்த 269 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 5 லட்சத்து 38 ஆயிரம் ஆகும்.
மளிகை கடை
இது போல் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கே.எஸ்.சி. பள்ளி வீதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டு அங்கிருந்து 31 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளரான தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த தினகரன் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மதிப்பு ரூ. 6 லட்சம் ஆகும்.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஈரோட்டிலிருந்து தனியார் பார்சல் சர்வீஸ் லாரி மூலமாக புகையிலை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
உரிமம் ரத்து
புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் கடைகள், பார்சல் சர்வீஸ் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.
Related Tags :
Next Story