செந்துறை அருகே பாசன குளத்தின் கரையில் உடைப்பு தண்ணீர் வீணாக வெளியேறியது


செந்துறை அருகே பாசன குளத்தின் கரையில் உடைப்பு தண்ணீர் வீணாக வெளியேறியது
x
தினத்தந்தி 21 Dec 2020 4:14 AM IST (Updated: 21 Dec 2020 4:14 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை அருகே பாசன குளத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ராயம்புரம் கிராமத்தில் இடையான்குளம் மற்றும் புது ஏரி ஆகியவை இணைந்து உள்ளன. இவற்றின் பரப்பளவு 80 ஏக்கர் ஆகும். இந்த ஏரியின் தண்ணீர் மூலம் 150 ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.

தற்போது குடிமராமத்து திட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் இந்த ஏரியை ஆழப்படுத்தும் பணி செய்யப்பட்டது. ரூ.19 லட்சம் செலவில் கரையில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கரையில் உடைப்பு

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குளம் முழுவதும் தண்ணீர் நிரம்பியது. இந்நிலையில் நேற்று அதிகாலை, விவசாய பாசனத்திற்கு தண்ணீர் செல்லக்கூடிய மதகு அருகே கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குளத்தில் இருந்து இரண்டடி மட்டத்திற்கு தண்ணீர் வெளியேறியது. இதனைபார்த்த பொதுமக்கள், கிராம நிர்வாக அதிகாரி ராஜேஸ்வரி ஆகியோர் உடனடியாக பொக்லைன் எந்திரம் மூலம் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் 50 மணல் மூட்டைகளை வைத்து சரி செய்துள்ளனர். இன்னும் சில நாட்களில் பயிர் சாகுபடி செய்வதற்கான பணிகளை விவசாயிகள் தொடங்க உள்ள நிலையில், கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டும் குளத்து கரையில் உடைப்பு ஏற்பட்டு, பின்னர் சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே கரையை பலப்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story