தள்ளுமுள்ளு சம்பவம் எதிரொலி: கர்நாடக மேல்-சபையில் துணை தலைவருக்கு தனி இருக்கை


தள்ளுமுள்ளு சம்பவம் எதிரொலி: கர்நாடக மேல்-சபையில் துணை தலைவருக்கு தனி இருக்கை
x
தினத்தந்தி 21 Dec 2020 5:07 AM IST (Updated: 21 Dec 2020 5:07 AM IST)
t-max-icont-min-icon

தள்ளுமுள்ளு சம்பவம் எதிரொலியாக, கர்நாடக மேல்-சபையில் துணை தலைவருக்கு தனி இருக்கை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

பெங்களூரு, 

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியின் போது, கர்நாடக மேல்-சபை தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப் சந்திர ஷெட்டியும், துணை தலைவராக ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த தர்மேகவுடாவும் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். கூட்டணி அரசு கவிழ்ந்து தற்போது பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு போதிய உறுப்பினர்கள் இல்லை. இதனால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் போது மேல்-சபை தலைவர் பிரதாப் சந்திரஷெட்டி அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் மேல்-சபை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜனதா கொண்டு வந்தது. அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த கடந்த சில தினங்களுக்கு முன்பு மேல்-சபை கூடியது. அப்போது மேல்-சபை தலைவர் சபைக்கு வராத நிலையில், அவரது இருக்கையில் துணை தலைவர் அமர்ந்து சபையை நடத்தினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் துணை தலைவரை இருக்கையில் இருந்து குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். இதனால் மேல்-சபையில் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) உறுப்பினர்கள் மோதிக் கொண்டனர். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை எற்படுத்தியது.

இந்த நிலையில் கர்நாடக மேல்-சபையில் துணை தலைவருக்கு என்று தனி இருக்கை அமைக்க வேண்டும், என்று கர்நாடக மேல்-சபை தலைவர், மேலவை செயலாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி தற்போது கர்நாடக மேல்-சபையில் துணை தலைவருக்கு தனி இருக்கை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் நிறைவு பெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய வரலாற்றில் மேல்-சபையில் துணை தலைவருக்கு தனி இருக்கை அமைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story