டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு கரூர்-குளித்தலை பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி


டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு கரூர்-குளித்தலை பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
x
தினத்தந்தி 21 Dec 2020 5:59 AM IST (Updated: 21 Dec 2020 5:59 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு கரூர்-குளித்தலை பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கரூர்,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு கரூரில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சங்கங்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள காமராஜர் சிலை அருகே நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு மாவட்ட விவசாய ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். இதில், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தனபால், மக்கள் அதிகாரம் சக்்திவேல், சுய ஆட்சி இந்தியா வேலு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன், பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் சம்பத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தங்கவேல், சாயப்பட்டறை விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கரூர் லைட்ஹவுஸ் கார்னர், சுங்ககேட், வெங்கமேடு பகுதியிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர் ஜோதிபாசு, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட குழு உறுப்பினர் தண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குளித்தலை

இதேபோல் குளித்தலை காந்தி சிலை அருகே அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் குளித்தலை ஒன்றியம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குளித்தலை ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதையடுத்து டெல்லியில் உயிரிழந்த விவசாயிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும், அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Story