தஞ்சை மாநகரில் ரூ.904 கோடியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை பேரூராட்சிகள் இயக்குனர் ஆய்வு


தஞ்சை மாநகரில் ரூ.904 கோடியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை பேரூராட்சிகள் இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Dec 2020 6:48 AM IST (Updated: 21 Dec 2020 6:48 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாநகரில் ரூ.904 கோடியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனரும், தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைவருமான எஸ்.பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி பகுதியில் ரூ.904 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 12 விதமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் குடிநீர், தெருவிளக்கு, பராமரிப்பு பணிகள் மற்றும் குடிநீர் நீரேற்று நிலையம் அமைத்தல், பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ் நிலையம் மேம்பாடு, கீழவாசல் சரபோஜி மார்க்கெட், காமராஜர் காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட் புதிதாக கட்டுதல், குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரித்தல், பூங்காக்கள் சீரமைப்பு, அகழியை மேம்படுத்தி படகு விடுதல், மணிக்கூண்டு சீரமைத்தல், அய்யங்குளம், சாமந்தாங்குளம், சிவகங்கை பூங்கா நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை தமிழக பேரூராட்சிகள் இயக்குனரும், தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைவருமான பழனிசாமி 2 நாட்கள் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு பணிகளையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகள் தரம், எவ்வளவு காலத்தில் முடிக்கப்படும் என கேட்டறிந்தார். நேற்று முன்தினமும், நேற்றும் இந்த ஆய்வு மேற்கொளப்பட்டது.

விரைந்து முடிக்க உத்தரவு

பின்னர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு பணியும் ஆய்வு செய்யப்பட்டு விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பழைய பஸ் நிலையம் மேம்பாடு செய்யும் பணி விரைவுபடுத்தப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் தரமாக நடைபெற அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு, அறிவுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், மாநகராட்சி பொறியாளர் (பொறுப்பு) ஜெகதீசன், இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story