குளத்தில் குளித்தபோது பரிதாபம்: தண்ணீரில் மூழ்கி மாணவன் பலி


குளத்தில் குளித்தபோது பரிதாபம்: தண்ணீரில் மூழ்கி மாணவன் பலி
x
தினத்தந்தி 21 Dec 2020 8:30 AM IST (Updated: 21 Dec 2020 8:30 AM IST)
t-max-icont-min-icon

செம்பட்டி அருகே குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது, மதகில் சிக்கி மாணவன் பரிதாபமாக இறந்துபோனான்.

செம்பட்டி,

செம்பட்டி அருகே உள்ள பாளையங்கோட்டை மேற்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார். அவருடைய மனைவி பூங்கொடி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பிரேம்குமார் (வயது 13). இவன், அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்தநிலையில் நேற்று காலை பூங்கொடி தனது மகன் பிரேம்குமாருடன் செம்பட்டி அருகே நடுக்குளத்திற்கு துணி துவைப்பதற்காக சென்றார். அங்கு பூங்கொடி குளத்தின் கரையில் அமர்ந்தபடி துணி துவைத்து கொண்டிருந்தார். அருகில் பிரேம்குமார் குளித்துக்கொண்டிருந்தான்.

அப்போது அவன் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் தண்ணீரில் மூழ்கிய அவன், குளத்தின் மதகு பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டான். அப்போது மதகில் சிக்கிய பிரேம்குமாரால் வெளியே வரவில்லை. இதனால் நீரில் மூழ்கிய அவன் சம்பவ இடத்திலேயே பலியானான்.

மதகில் சிக்கி...

இதற்கிடையே தனது மகனை காணவில்லை என்று பூங்கொடி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிரேம்குமாரை தேடினார். அப்போது அவன், மதகில் சிக்கியபடி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு பூங்கொடி கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் பிரேம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் புகார்

இதற்கிடையே சிறுவனின் தாயார் பூங்கொடி போலீசாரிடம் அளித்த புகாரில், நான் மற்றும் எனது உறவினர்கள் நடுக்குளத்தில் துணி துவைத்துக்கொண்டிருந்த போது, முன்னறிவிப்பு இல்லாமல் ஆத்தூரைச் சேர்ந்த 2 பேர் அருகில் உள்ள புல்வெட்டி குளத்திற்கு தண்ணீர் செல்வதற்காக நடுக்குளத்தின் மதகை திறந்துவிட்டனர். அப்போது தான், எனது மகன் பிரேம்குமார் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டதுடன், மதகில் சிக்கி பலியானான். எனவே அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதகில் சிக்கி இறந்த பிரேம்குமாரின் தந்தை சுரேஷ்குமார், பா.ஜ.க. எஸ்.சி., எஸ்.டி. அணியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளராக இருந்தார். அவர், கடந்த 2 மாதத்திற்கு முன்பு தான் உடல் நலக்குறைவால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story