மாமல்லபுரத்தில் செல்போன் சிக்னல் கோளாறால் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிரமம்; புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


மாமல்லபுரம் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய கியூ-ஆர் கோடு பலகை அருகில் காத்திருக்கும் பயணிகள்
x
மாமல்லபுரம் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய கியூ-ஆர் கோடு பலகை அருகில் காத்திருக்கும் பயணிகள்
தினத்தந்தி 21 Dec 2020 10:52 PM GMT (Updated: 21 Dec 2020 10:52 PM GMT)

மாமல்லபுரத்தில் செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காததால் புராதன சின்னங்களை கண்டுகளிக்க ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறுவதில் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

புராதன சின்னங்கள்
கொரோனா தொற்று காரணமாக உலக புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம் உள்ளிட்ட பாரம்பரிய புராதன சின்னங்கள் 8 மாதங்களாக மூடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் வழிகாட்டி நெறிமுறைகளுடன் கடந்த 14-ந் தேதி புராதன சின்னங்கள் மீண்டும் திறக்கப்பட்டு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை தினந்தோறும் அதிகரித்து வருவதால் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்கள் களைகட்டி உள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆன்லைன் சேவை மூலம் பதிவு செய்து நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

சிக்னல் கோளாறு
கடற்கரை கோவில், ஐந்துரதம் பகுதிகளின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள கவுண்ட்டருக்கு அருகில் உள்ள பலகையில் உள்ள கியூ-ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்து இணைய வழி பணபரிமாற்றம் மூலம் நபர் ஒருவருக்கு ரூ.40 கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெறமுடியும்.

ஆனால் ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை பகுதியில் உள்ள ஆன்லைன் டிக்கெட் பெறும் இடங் களில் செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் செல்போன் மூலம் நுழைவு சீட்டு பெற முடியாமல் சுற்றுலா பயணிகள் மணிக்கணக்கில் காத்திருந்து, புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதுகுறித்து பெங்களூரூவை சேர்ந்த சுற்றுலா பயணி ஷீலா கூறியதாவது:-

கவுண்ட்டர்களில்...
தொல்லியல் துறை நிர்வாகம் ஆன்லைன் டிக்கெட் முறையை முழுவதுமாக ரத்து செய்துவிட்டு, வழக்கம்போல் கவுண்ட் டர்களில் பணபரிமாற்றம் மூலம் நுழைவுசீட்டு முறையை கொண்டுவரவேண்டும்.

ஆன்லைன் பணபரிமாற்ற வசதி இருந்தால் மட்டுமே டிக்கெட் பதிவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளதால், இந்த வசதி செல்போனில் இல்லாத பயணிகள் படும் வேதனை கவலை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story