பழவேற்காட்டில் கடலில் குளிக்கச் சென்ற யோகா பயிற்சியாளர் நீரில் மூழ்கி பலி; அவரை காப்பாற்ற முயன்ற மீனவருக்கு தீவிர சிகிச்சை
பொன்னேரி அடுத்த பழவேற்காடு கடலில் குளிக்கச் சென்ற யோகா பயிற்சியாளர் நீரில் மூழ்கி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற மீனவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடலில் குளித்தனர்
சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 37). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், அதே பகுதியில் யோகா பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் யோகா மையத்தில் பயிற்சி பெற்று வரும் 10 மாணவர்களுடன் பழவேற்காடு பகுதியில் உள்ள கடலோர மீனவ கிராமமான திருமலை நகரில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு வந்தார்.
பின்னர் மீனவரான கண்ணன் (45) என்பவரின் படகில் கடலில் குளிப்பதற்காக மாணவர்களை அழைத்து கொண்டு முகத்துவாரம் பகுதிக்கு சென்றார். அப்போது நவீன் என்ற மாணவர் கடலில் குளிக்கும் போது, கடல் அலை இழுத்துச் சென்றது. அவரை காப்பாற்ற முயன்ற போது, வேலுவையும் கடல் அலை இழுத்து சென்றது.
பயிற்சியாளர் பலி
இந்த நிலையில், மாணவர் நவீனையும், பயிற்சியாளர் வேலுவையும் படகை ஓட்டிச் சென்ற மீனவர் கண்ணன் காப்பாற்றி கடற்கரைக்கு கொண்டு வந்தார். அவர்கள் 2 பேரையும், பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிய நிலையில், மேல் சிகிச்சைக் காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வேலு பரிதாபமாக பலியானார்.
இந்நிலையில் வேலு மற்றும் நவீனை நீரில் மூழ்கி காப்பாற்றிய மீனவர் கண்ணன் மிகவும் ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story