தனியார்மயம் தொடர்பான அரசாணையை திரும்ப பெறக்கோரி மின் வாரிய பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


தனியார்மயம் தொடர்பான அரசாணையை திரும்ப பெறக்கோரி மின் வாரிய பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2020 5:58 AM IST (Updated: 22 Dec 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

தனியார்மயம் தொடர்பான அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என கோரி திருச்சியில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

தமிழக மின்சார வாரியத்தில் பிரிவு அலுவலகங்கள், துணை மின் நிலையங்கள் மற்றும் பல்வேறு அலுவலகங்களை தனியார்மயமாக்குவதற்கு அதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனக்கோரியும் திருச்சியில் நேற்று மின் வாரிய பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களிலும் உள்ள பொறியாளர் அலுவலகங்கள், உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை பூட்டிவிட்டு மன்னார் புரத்தில் உள்ள மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாசலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

அதிகாரிகளும் பங்கேற்பு

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த பணியாளர்கள், பணியாளர்கள், இளநிலை அதிகாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை தவிர சி.ஐ.டி.யு., தொ.மு.ச.உள்பட அனைத்து தொழிற்சங்கத்தினரும் இதில் கலந்து கொண்டனர். இதனால் மின்வாரிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மதியத்திற்கு பின்னர் இந்த காத்திருப்பு போராட்டத்தில் திருச்சி மாநகர மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்துகொண்டனர். காலையில் தொடங்கிய போராட்டம் இரவு 7 மணி வரை நீடித்தது.இரவு 7 மணிக்கு பின்னர் அரசாணை தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் அளித்த உறுதி மொழியை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு திரும்புவதாக அவர்கள் கூறி விட்டு கலைந்து சென்றனர்.

Next Story