நாகர்கோவிலில் பயங்கரம்: தொழிலாளி எரித்துக் கொலை 5 பேர் சிக்கினர்


நாகர்கோவிலில் பயங்கரம்: தொழிலாளி எரித்துக் கொலை 5 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 22 Dec 2020 7:25 AM IST (Updated: 22 Dec 2020 7:25 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் தொழிலாளி எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசாரிடம் சிக்கிய 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் காய்கறிகள் சந்தை உள்ளது. இந்த சந்தையின் பின்புறம் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்தநிலையில் ஒரு வீட்டின் முன்பு நேற்று காலை ஆண் பிணம் ஒன்று கிடந்தது. பிணமாக கிடந்தவரின் கழுத்து முதல் இடுப்பு வரையில் எரிந்த நிலையில் இருந்தது. இதனை பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் இருளப்பபுரம் சர்ச் தெருவைச் சேர்ந்த சந்திரன் (வயது 58), கூலித்தொழிலாளி என்பது தெரிய வந்தது.

எரித்துக்கொலை

சந்திரனுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் சந்திரன் இரவு நேரங்களில் இருளப்பபுரம் சந்தை பகுதியில் சுற்றித்திரிந்து, அந்த பகுதியில் உள்ள கடைகள் அல்லது வீடுகள் முன்பு தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதேபோன்றுதான் நேற்று முன்தினம் இரவும் அவர் சம்பவம் நடந்த வீட்டின் முன்பு படுத்து தூங்கி உள்ளார். அப்போது யாரோ சில மர்ம நபர்கள் சந்திரனை தீ வைத்து கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் பிணமாக கிடந்த சந்திரனின் அருகில் சிலர் நின்று செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. ஆனால் அந்த காட்சிகள் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் கிடைத்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

5 பேர் சிக்கினர்

இந்த நிலையில் சந்திரன் கொலை தொடர்பாக 5 பேர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்கள் தான் எரித்து கொன்றிருக்கலாம் என்று தெரியவருகிறது.

முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்திரன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாதுகாப்பு இல்லாத பகுதி

சந்திரன் கொலை செய்யப்பட்ட இருளப்பபுரம் சந்திப்பு பகுதி மக்கள் நடமாட்டம் மிகுந்ததும், குடியிருப்புகள் நெருக்கமாக உள்ள பகுதியும் ஆகும். அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த பகுதியில் வாகன போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் சந்திரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சந்திரன் பிணமாக கிடந்த பகுதி பாதுகாப்பு இல்லாத பகுதி என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஏன் எனில் அந்த பகுதியில் சாலையோரம் மதுக்கடை உள்ளது. அங்கு மதுபானங்களை வாங்கும் மதுப்பிரியர்கள் சாலை ஓரத்தில் நின்றபடியே மது அருந்துகிறார்கள். பின்னர் மதுபோதையில் அந்த வழியாக செல்பவர்களிடம் தகராறு செய்கிறார்கள். அதிலும் இரவு நேரங்களில் மதுப்பிரியர்களின் அட்டகாசம் அதிகமாக இருக்கிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை தடுத்து மதுப்பிரியர்கள் ரகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக சாலையில் பெண்கள் தைரியமாக நடந்து செல்ல முடியவில்லை.

கோரிக்கை

எனவே சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து செல்ல வேண்டும் என்றும், அந்த சமயத்தில் தகராறு செய்யும் மதுப்பிரியர்களை போலீசார் கண்டிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story