ராமேசுவரம் கோவிலில் ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது


ருத்ராட்சை மண்டபத்தில் வீற்றிருந்த நடராஜர்-சிவகாமி அம்பாள்
x
ருத்ராட்சை மண்டபத்தில் வீற்றிருந்த நடராஜர்-சிவகாமி அம்பாள்
தினத்தந்தி 22 Dec 2020 8:47 AM IST (Updated: 22 Dec 2020 8:47 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கோவிலில் ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

காப்பு கட்டு
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் திருவாதிரை ஆருத்ரா திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த நிலையில் இந்த ஆண்டின் ஆருத்ரா திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கோவிலின் 3-ம் பிரகாரத்தில் 1 லட்சம் ருத்ராட்சை மாலைகளால் ஆன மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜருக்கும் மற்றும் சாமி சன்னதி பிரகாரத்தில் வீற்றிருக்கும் நடராஜருக்கும் காப்பு கட்டப்பட்டது.

தொடர்ந்து நடராஜர்-சிவகாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். சிறப்பு பூஜையில் கோவிலின் இணைஆணையர் கல்யாணி, பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலைச் செல்வன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆருத்ரா திருவிழா காப்பு கட்டப்பட்டு தொடங்கியதை தொடர்ந்து இன்று முதல் வருகிற 29-ந் தேதி வரை தினமும் காலை மற்றும் மாலையில் மாணிக்கவாசகர் தங்ககேடயத்தில் 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடராஜருக்கு தினமும் சிறப்பு மகா தீப ஆராதனை பூஜையும் நடைபெறும்.

ஆருத்ரா திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற டிசம்பர் மாதம் 30-ந் தேதி அன்று அதிகாலை 4 மணிஅளவில் 3-ம் பிரகாரத்தில் சபாபதி சன்னதியில் வீற்றிருக்கும் நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு பால், பன்னீர், சந்தனம், திரவியம், மாபொடி, மஞ்சள்பொடி, இளநீர், தேன் உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெறும். அபிஷேகத்திற்கு பின்பு நடராஜர்-சிவகாமி அம்பாள் ஆகியோருக்கு தங்க கவசம் அணிவிக்கப் பட்டு சிறப்பு மகா தீப ஆராதனை பூஜைகள் நடைபெறும்.

நடை திறப்பில் மாற்றம்
வருகிற 30-ந் தேதி அன்று திருவாதிரை ஆருத்ரா திருவிழாவை யொட்டி திருக்கோவிலின் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப் பட்டு 2.30 மணி முதல் 3.30 மணி வரையிலும் ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெறும். தொடர்ந்து நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்று காலை 5.15 மணி அளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அதன் பின்பு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.இந்த தகவலை கோவிலின் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

Next Story