சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.-மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டம்


சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.-மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2020 10:17 AM IST (Updated: 22 Dec 2020 10:17 AM IST)
t-max-icont-min-icon

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.- மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே தி.மு.க. மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக கியாஸ் சிலிண்டருக்கு பாடைகட்டி அங்குவிலாஸ் ரவுண்டானாவில் இருந்து நாகல்நகருக்கு தி.மு.க. மகளிரணியினர் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

மேற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேவதி, வேலுச்சாமி எம்.பி., தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி எம்.எல்.ஏ.வுமான இ.பெ.செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் கியாஸ் சிலிண்டர் முன்பு பெண்கள் ஒப்பாரி வைத்தனர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜனநாயக மாதர் சங்கம்

இதேபோல் திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜானகி உள்பட பலர் கலந்துகொண்டு கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், ஊரக வேலை உறுதி திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்கக்கோரியும் கோ‌‌ஷங்களை எழுப்பினர். பின்னர் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்த பெண்கள், அதன் முன்பு அமர்ந்து விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைத்தனர்.

பழனி

பழனியில் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராணி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர் திடீரென்று கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீசார் உடனடியாக சிலிண்டரை போராட்டக்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இதற்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசாருக்கும், மாதர் சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட செயலாளர் ராணி பாடையில் படுத்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். அதைத்தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ேபாராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிது நேரம் கோஷமிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story