காதல் திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை


காதல் திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 24 Dec 2020 8:15 AM IST (Updated: 24 Dec 2020 8:15 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் 1-ம் சேத்தி கீழத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகள் கயல்விழி. இவர் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் கருணாநிதி என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் கருணாநிதி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கயல்விழியுடன் உல்லாசமாக இருந்தார். இதனால் கயல்விழி கர்ப்பம் அடைந்தார்.அதன் பின்னர் திருமணம் செய்ய மறுத்து விட்டார். இது குறித்து கயல்விழி வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் 2 தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து 23-4-2007 அன்று தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார்கோவிலில் வைத்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர்.

வரதட்சணை கொடுமை

இந்த நிலையில் கயல்விழியிடம் வரதட்சணையாக ரூ.20 ஆயிரம், 15 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வாங்கி வருமாறு, கருணாநிதி, அவருடைய தாயார் பொன்னாச்சி, தந்தை குணசேகரன், தங்கை சங்கீதா ஆகியோர் கொடுமை படுத்தி உள்ளனர். மேலும் கயல்விழியை வீட்டை விட்டு விரட்டினர்.

இதையடுத்து கயல்விழி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கயல்விழி வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

3 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கு தஞ்சை ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2-ல் நடந்து வந்தது. வழக்கை மாஜிஸ்திரேட்டு மோசஸ்ஜெபசிங் விசாரித்து கருணாநிதி, பொன்னாச்சி, குணசேகரன், சங்கீதா ஆகிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார். மற்ற 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story