கழிவுநீர் ஏற்றி வந்த டேங்கர் லாரியில் திடீர் தீ பொதுமக்கள் போராடி அணைத்தனர்


கழிவுநீர் ஏற்றி வந்த டேங்கர் லாரியில் திடீர் தீ பொதுமக்கள் போராடி அணைத்தனர்
x
தினத்தந்தி 24 Dec 2020 3:01 AM GMT (Updated: 24 Dec 2020 3:01 AM GMT)

தக்கலை அருகே கழிவுநீர் ஏற்றி வந்த டேங்கர் லாரியில் திடீரென தீ பிடித்து எாிந்தது. தீயை பொதுமக்கள் போராடி அணைத்தனர்.

பத்மநாபபுரம்,

கேரள எல்லை பகுதியில் உள்ள ஒரு தனியார் மீன் கம்பெனியில் கழிவுநீரை ஏற்றி கொண்டு டேங்கர் லாரி ஒன்று திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை நாங்குநேரியை சேர்ந்த கண்ணன் ஓட்டினார். தக்கலை தலைமை தபால் நிலையம் அருகே சென்றபோது லாரியின் எஞ்சின் பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனடியாக சாலை ஓரம் லாரியை நிறுத்தினார். பின்னர் தீயை அணைக்க முயற்சி செய்தார். அப்பகுதி மக்களும் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை ஊற்றி தீயை போராடி அணைத்தனர். பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

துர்நாற்றம்

ஆனால் தீ விபத்தால் பழுதாகி நின்ற டேங்கர் லாரியில் கழிவுநீர் இருந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் அவதி அடைந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். லாரியில் இருந்த கழிவுநீர் கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்தில் கொட்டுவதற்காக கொண்டு வரப்பட்டதாக பொதுமக்கள் கருதினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து தக்கலை போலீசார் அங்கு வந்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனியார் மீன் கம்பெனியில் இருந்து கழிவுநீர் ஏற்றி வரப்பட்டது தெரியவந்தது. ேமலும் சம்பந்தப்பட்ட தனியார் மீன் கம்பெனியில் இருந்து கழிவு நீர் வெளியேற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், எனவே கழிவுநீரை நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்றொரு கம்பெனிக்கு சொந்தமான இடத்தில் ஊற்றுவதற்காக கழிவுநீரை கொண்டு சென்றதாகவும் டிரைவர் கூறினார். எனினும் இதுதொடர்பாக தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story