விசாரணைக்கு அழைத்துச்சென்ற வியாபாரியை தாக்கியதாக புகார் கோவில்பட்டியில் இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீசார் மீது வழக்கு


விசாரணைக்கு அழைத்துச்சென்ற வியாபாரியை தாக்கியதாக புகார் கோவில்பட்டியில் இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீசார் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 Dec 2020 10:26 AM IST (Updated: 24 Dec 2020 10:26 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற வியாபாரியை தாக்கியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 9 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்தவர் செல்லத்துரை என்ற செல்வம், வியாபாரி. இவர் கோவில்பட்டி தினசரி சந்தையில் வாழைக்காய், இலை கடை வைத்துள்ளார். மேலும் பூலித்தேவர் மக்கள் நல இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார். பல்வேறு சமூகப்பிரச்சினையில் கலந்து கொண்டு போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

கோர்ட்டில் வழக்கு

இநதநிலையில் கடந்த 17.04.2018-ல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் நின்று கொண்டு இருந்த தன்னை போலீசார் விசாரணை என்று அழைத்துச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து தாக்கியதாகவும், ஆர்ப்பாட்டங்களில் போலீஸ்துறை பற்றி பேசியதை கண்டித்து அவதூறாக பேசியதாவும் கூறி அப்போதைய கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் உள்பட 9 போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2ல் வழக்கு தொடர்ந்தார்.

9 போலீசார் மீது வழக்கு

இந்த வழக்கில் கடந்த 19.11.2020 அன்று இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில், அதனை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி சுப்பிரமணியன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ், மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன், நாலாட்டின்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிதிலிப், போலீசார் முத்துப்பாண்டி, ஹரிபாலகிருஷ்ணன், ராஜசேகர், ஜான், ஜெயபால் ஆகிய 9 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story