பல்லடத்தில் லாரி மீது வேன் மோதல்; 2 பேர் பலி சாலை மறியலால் - போக்குவரத்து பாதிப்பு


பல்லடத்தில் லாரி மீது வேன் மோதல்; 2 பேர் பலி சாலை மறியலால் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 24 Dec 2020 6:16 PM IST (Updated: 24 Dec 2020 6:16 PM IST)
t-max-icont-min-icon

பல்லடத்தில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

பொங்கலூர், 

திருப்பூர் மாவட்டம் உடுமலை வரதராஜபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பிரபாகரன் (வயது 30). உடுமலையில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று முன்தினம் உடுமலையில் இருந்து வேனில் கோழித்தீவனம் ஏற்றிக்கொண்டு பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவருடன் பீகார் மாநிலத்தை சேர்ந்த பன்லால் சஹானி (35) என்பவரும் வந்தார். இவர்களுடைய வேன் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு உடுமலை-பல்லடம் சாலையில் வாவிபாளையம் அருகே வந்தது. அப்போது இவர்களுடைய வேனுக்கு முன்னால் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் லாரி மீது பிரபாகரன் ஓட்டி சென்ற வேன் திடீரென்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரபாகரன் மற்றும் பன்லால் சஹானி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காமநாயக்கன்பாளையம் போலீசார் வந்தனர். பின்னர் பிரபாகரன், பன்லால் சஹானி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு பிரபாகரனின் உறவினர்கள் நேற்று திரண்டனர். பின்னர் பிரபாகரன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீராமச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் கோழிப்பண்ணை நிர்வாக பிரதிநிதி ஒருவரும் கலந்து கொண்டார்.

பேச்சுவார்த்தையின் முடிவில் உயிரிழந்த பிரபாகரனின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை பெற்று தருவதாகவும், தற்போது ஈமச் சடங்கிற்காக பணம் தருவதாகவும் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story