தீர்த்த கிணறுகளை திறக்க வலியுறுத்தி பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரதம்
தீர்த்த கிணறுகளை திறக்க வலியுறுத்தி பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
ராமேசுவரம்,
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கோவில்களுக்கும் பக்தர்கள் செல்ல தடை கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யவும், தீர்த்த கிணறுகளில் நீராடுவதற்கும் அனுமதிக்கப்படவில்லை.
அதுபோல் 5 மாதத்திற்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் 9 மாதங்கள் கடந்தும் இதுவரையிலும் திறக்கப்படவில்லை. இதனால் தீர்த்தக்கிணறுகளையே நம்பி வாழும் 450-க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்கள் வருமானம் இன்றி குடும்பத்துடன் பசி பட்டினியுடன் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் குற்றாலம் அருவி, கொடைக்கானல் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையிலும் ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் 9 மாதங்கள் கடந்தும் இதுவரையிலும் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளை வழக்கம்போல் திறந்து பக்தர்கள் நீராட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று பஸ்நிலையம் எதிரே பா.ஜனதா கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்திற்கு பா.ஜனதா கட்சியின் நகர் தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முரளிதரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் குப்புராமு, சுப.நாகராஜன், எஸ்.சி.அணி மாநில தலைவர் பாலகணபதி, மாவட்ட துணைத்தலைவர்கள் பவர் நாகேந்திரன், ராஜேசுவரி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் சுந்தரமுருகன், குமார் மற்றும் நிர்வாகிகள் நம்பு நாயகம், ராமச்சந்திரன், ரவி, மீரா பாஸ், இந்து முன்னணி மாவட்ட பொதுசெயலாளர் ராமமூர்த்தி, நகர் தலைவர் நம்புராஜன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story