தகுதியானவர்களுக்கு மாற்று இடத்தை வழங்குங்கள்: பீ.பீ.குளம் நீர்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்தவர்கள் 4 மாதத்தில் வெளியேற வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மதுரை ஐகோர்ட்டு
x
மதுரை ஐகோர்ட்டு
தினத்தந்தி 25 Dec 2020 4:09 AM IST (Updated: 25 Dec 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

பீ.பீ.குளம் நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்தவர்கள் 4 மாதத்தில் வெளியேற வேண்டும், தகுதியானவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மனு
மதுரை பீ.பீ.குளத்தைச் சேர்ந்த ஞானசேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை பீ.பீ.குளம், நேதாஜி மெயின்ரோடு பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்ப்பிடிப்பு பகுதியை ஒட்டி சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். மின் இணைப்பு, ஆதார் மற்றும் குடும்ப அட்டை, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவை அரசால் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளோம். இதுவரை வழங்கப்படவில்லை.

ஆக்கிரமித்துள்ள இடத்தை 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நோட்டீஸ் கொடுத்துள்ளார். எங்களுக்கு வேறு இடம் இல்லை. நாங்கள் அனைவரும் தினக்கூலிகள். வெளியேற்றினால் கடுமையாக பாதிக்கப்படுவோம். எனவே, எங்களை வெளியேற்றக்கூடாது எனவும், உதவி பொறியாளர் நோட்டீசுக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

உத்தரவு
இதேபோல் மேலும் பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு- சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் 2 அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்திருந்தால் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தகுதியானவர்கள் குடியிருக்க குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று இடம் கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதியில் குடியிருப்பவர்கள் 4 மாதத்தில் காலி செய்வதாக உறுதிமொழி பத்திரம் கொடுக்க வேண்டும். உத்தரவாதம் அளிக்காதவர்களின் வீடுகளுக்கான மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். ஆக்கிரமிப்பை தடுக்க அரசுக்கு பரிந்துரைக்கும் வகையில் தாலுகா அளவில் வி.ஏ.ஓ., தாசில்தார், போலீஸ், பொதுப்பணித்துறையினர் உள்ளிட்ட துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து உரிய நடவடிக்கை வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story