அடிப்படை வசதி கோரி ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்


ராமநாதபுரத்தில் சேதுபதி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
x
ராமநாதபுரத்தில் சேதுபதி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
தினத்தந்தி 24 Dec 2020 11:37 PM GMT (Updated: 24 Dec 2020 11:37 PM GMT)

அடிப்படை வசதி கோரி ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்
ராமநாதபுரத்தில் சேதுபதி அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. பழமையான இந்த கல்லூரியில் கொரோனா தடைக்கு பின்னர் மூன்றாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை மாணவ, மாணவிகள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், முறையான நேரத்திற்கு பஸ் வசதி செய்து தரக்கோரியும், கழிப்பறைகளை சுத்தம் செய்து வழங்கவும், குடிநீர், தங்கும் இடம், கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பற்ற குளங்களை சுற்றி கம்பி வேலி அமைத்து தரவும், சீரான விளையாட்டு மைதானம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மழைகாலத்தில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து விடுவதால் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு கல்வி கற்க முடியாத நிலை உள்ளது. மாணவர்களின் கோரிக்கைகளை முதல்வர் கண்டுகொள்ளாமல் அலட்சியபோக்குடன் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டி மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷங்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் கடந்த வாரம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அடுத்தடுத்து போராட்டங்கள் நடத்திய நிலையில் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் நேற்று மீண்டும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் அங்்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story